Skip to main content

தாயும் மகனும் எடுத்த விபரீத முடிவு; வீடு திரும்பிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி

 

dharmapuri ottapatti village mother and son incident

 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள ஒட்டப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 65). இவர் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். இவருக்கு சாந்தி (வயது 50) என்ற மனைவியும், விஜய் ஆனந்த் (வயது 30) என்ற மகனும் உள்ளனர். இன்ஜீனியரான விஜய் ஆனந்துக்கு இன்னும் திருமணமாகாமல் இருந்துள்ளார். இந்நிலையில் பழனிவேல் கடந்த சனிக்கிழமை உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக, பாலக்கோடு சென்றுள்ளார். அதன் பின்னர் திருமண நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

 

இதனால் சந்தேகம் அடைந்து பழனிவேல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது படுக்கை அறையில் மனைவி சாந்தி மற்றும் மகன் விஜய் ஆனந்த் இருவர் முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு அருகிலேயே இரண்டு கேஸ் சிலிண்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. அந்த சிலிண்டர்களில் இருந்து குழாய் ஒன்று இருவரின் தலையைச் சுற்றிய பாலிதீன் கவருக்குள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து சோதனை செய்தபோது, அவர்கள் உயிரிழந்து கிடந்த அறை முழுவதும் விஷவாயு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு இருந்த ஜன்னலில் 'உடனடியாக ஜன்னலை உடைத்து விட்டு, போலீசை அழைத்து வாருங்கள்' என பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டுள்ளனர். மேலும் திறந்த நிலையில் இருந்த கேஸ் சிலிண்டரை மூடி உள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில், விஜய் ஆனந்த் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், "நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஜவுளி தொழில் செய்து வந்தேன். அதற்காக 25 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன். ஆனால் நண்பர்கள் என்னை ஏமாற்றியதோடு, நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல், பல்வேறு முறைகளில் மன உளைச்சலை ஏற்படுத்தினர். இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் விரைவாகத் தீர்வு காண வேண்டும் என உங்கள் பாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்" என இருந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த அருண் (வயது 36) மற்றும் கார்த்திக் (வயது 34) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !