Skip to main content

பங்கேற்ற கங்கனா; அழைக்கப்படாத குடியரசுத் தலைவர்! கேள்வி எழுப்பிய எம்.பி.

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Derek O. Brien on why Draupadi Murmu was not invited  new parliamentary session

 

திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வு வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில்  நடைபெற்றது. அப்போது 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர். 

 

இதனைத் தொடர்ந்து கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று (18 ஆம் தேதி) ஏற்கனவே அறிவித்தபடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது இதற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தரும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 

 

இந்த நிலையில் நேற்று கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பழைய கட்டிடத்திற்கு விடைகொடுத்துவிட்டு, ஒன்றாக புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றனர். இது தொடர்பான விழா துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கும் ஏன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்கவில்லை என்ற கேள்வியை தற்போது எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர். 

 

ஏற்கனவே கடந்த மே மாதம் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காமல், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமர் மோடியே கட்டிடத்தை திறந்து வைத்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடியினர் என்பதாலேயே பாஜக தலைமையிலான மத்தியரசு அவருக்கு அழைப்பு கூட விடுக்காமல் இருந்தது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர். இந்த நிலையில்தான் நேற்று பிரதமர், துணை குடியரசுதலைவர், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் அனைவரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும் நிகழ்வு நடந்தது. 

 

இந்த  நிகழ்விற்கு ஏன் குடியரசு தலைவர் அழைக்கப்படவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஓ.பிரைன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எங்கே இருந்தார்? ஏன் அவர் புறக்கணிக்கப்பட்டார்? அவர் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டாரா? எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டதையொட்டி கங்கனா, ஈஷா குப்தா உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது” - முதல்வர்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Right of expression issue in Parliament 

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 22 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா உரையாற்றும்போது, தந்தை பெரியாரின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். அப்போது பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தந்தை பெரியாரின் பெயர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் தந்தை பெரியாரின் பெயரை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக் காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.

மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி. சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம். மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும், எப்போதும், எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம். அனைவரும் பயன்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மத்தியப் பிரதேச முதல்வராக விஷ்ணு மோகன் யாதவ் தேர்வு!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Vishnu Mohan Yadav chosen as Chief Minister of Madhya Pradesh

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.