டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரே நேரத்தில் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் டெங்கு காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் ஒரு சிறுவனும், புதுச்சேரியில் இரு பெண்களும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. டயர்கள், தொட்டிகளில் நீர் தேங்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 280 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், 39 பேர் மருத்துவமனையில் டெங்குவால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரண்டு வரிசையில் நின்று வருகின்றனர். புறநோயாளிகள் பிரிவில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.