Skip to main content

பாலியல் குற்றவாளிக்கு சாதகம்; காவல் ஆய்வாளர் பதவி இறக்கம்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Demotion police inspector who behaved favorably to the criminals

 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சேத்திலால் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன்(46). இவரது முதல் மனைவி செல்லதங்கம் இறந்த பிறகு மயிலாடுதுறை கூரநாடு பெரிய பள்ளி தெருவைச் சேர்ந்த சலாமத் நாச்சியார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவருக்கு 7 வயதில் மகன் உள்ளார். கமாலுதீன் அடிக்கடி சலாமத் நாச்சியார் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்ததால் அவரைப் பிரிந்து மயிலாடுதுறையில் உள்ள தனது மூத்த சகோதரி நர்கீஸ் பானுவுடன் சலாமத் நாச்சியார் வசித்து வந்தார்.

 

இதனால் கமாலுதீன் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக அமிதாபானு(35) என்பவரை திருமணம் செய்தார். இருப்பினும் அடிக்கடி சலாமத் நாச்சியாருக்கு போன் மூலமாகவும், மயிலாடுதுறைக்கு நேரடியாகச் சென்றும் கமாலுதீன் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதோடு நாச்சியாரின் மூத்த சகோதரி நர்கீஸ் பானுவுக்கு கமாலுதீன் செல்போனில் வாட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோக்களையும், அருவருக்கத்தக்க வாசகங்களையும் அனுப்பியதாகவும் தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த நர்கீஸ் பானு வெளிநாட்டில் பணியாற்றும் அவரது கணவர் நஸ்ருதீனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் 18_ஆம் தேதி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் நர்கீஸ்பானு புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் புகாரை பெற்றுக் கொண்டு கமாலுதீனை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் நர்கீஸ்பானுவின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியதாக தெரிகிறது.

 

இதனால் விரக்தியடைந்த நர்கீஸ் பானு தமிழக கவர்னர், முதலமைச்சர், தேசிய மகளிர் ஆணையம், மனித உரிமை ஆணையம், புதுச்சேரி கவர்னர் மற்றும் முதலமைச்சருக்கு புகார் கடிதங்கள் அனுப்பினார். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேசிய மனித உரிமை ஆணையம் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷாவுக்கு உத்தரவிட்டது.

 

அந்த உத்தரவின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா காரைக்கால் நகரப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கமாலுதீன் உள்பட 3 பேர் மீது வழக்கும் பதிந்தார். தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் டி.ஜி.பி மோகன்குமார் லால் உத்தரவுப்படி கடந்த ஆண்டு இன்ஸ்பெக்டர் சிவகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

 

இதில் இன்ஸ்பெக்டர் காவல்துறையின் மீது நம்பகத்தன்மை இழக்கும் வகையிலும், சிசிஎஸ் விதிகள் 1964_ன் படியும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை போலீஸ் அதிகாரி என்ற முறையில் தடுக்க தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் கடந்த 2021-22 ஆம் ஆண்டு காரைக்கால் நகர காவல் நிலையத்தில் பணியில் இருந்த காலகட்டத்தில் காவல் நிலையத்தில் புதுச்சேரியை சேர்ந்த 9 பேர் காரைக்கால் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட கோர்ட் உத்தரவிட்டது. இதில் 4 பேர் மட்டும் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட நிலையில் 9 பேரும் கையெழுத்து போட்டதாக பதிவு செய்யப்பட்டது.  தொடர்ந்து கையெழுத்து இட வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி 100 கிராம் அளவுள்ள 13 கஞ்சா பொட்டலங்களுடன் இருவரை சிறப்பு அதிரடிப்படை பிடித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தது ஒப்படைத்தனர்.

 

ஆனால் அவர்களை மேல் அதிகாரி உத்தரவு இல்லாமல் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் சிவக்குமார் விடுவித்துள்ளார். இதன் மூலம் அவர் தனது இன்ஸ்பெக்டர் கடமையில் இருந்து தவறியதோடு ஒழுங்கீனமாகவும் தனது பணியை தவறாகவும் பயன்படுத்தியிருக்கிறார். இதுவும் காவல்துறை விதிகளுக்கு எதிரானது. இவர் தொடர்ந்து காவல்துறையில் பெரிய பொறுப்புகளில் பணியாற்றுவது சரியானது அல்ல என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் டி.ஜி.பி மனோஜ்குமார் லாலிடம் விசாரணை குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதனை ஏற்று சிவக்குமாரை இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருந்து விடுவித்து, கீழ்நிலை பொறுப்பான சப்-இன்ஸ்பெக்டர் ஆக பதிவிறக்கம் செய்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஒருவர் தனது தகாத நடவடிக்கைகளாலும், கடமையை செய்ய தவறியதாலும், குற்றங்களை தடுக்க தவறியதாலும் சப்-இன்ஸ்பெக்டராக பதவியிறக்கம் செய்தது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்