
கள்ளக்குறிச்சியில் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனக்காப்பாளர் மீது வேட்டையாட வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது பாக்கம்பாடி வனப்பகுதி. நேற்று இரவு எஸ்ஐ தலைமையில் சம்பந்தப்பட்ட வனப்பகுதியில் வனக்காப்பாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது தெரிந்து. இதனால் வனப்பகுதிக்குள் சென்று வனக்காப்பாளர் வேல்முருகன் ஆய்வு செய்துள்ளார். அப்போது வேட்டையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க வேல்முருகன் முயன்ற நிலையில் மூவரும் தப்ப முயன்றனர்.
இதில் ஒருவர் சிக்கிய நிலையில், இருவர் தப்பி ஓடிவிட்டனர். அதில் ஒருவர் துப்பாக்கியை தூக்கி வீசியதில் வேல்முருகனின் காலில் துப்பாக்கி குண்டு பட்டு காயமடைந்தார். தற்பொழுது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குண்டடிப்பட்ட வனக்காப்பாளர் வேல்முருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தப்பிச் சென்ற இருவரை வனத்துறையினரும் போலீசாரும் தேடி வருகின்றனர்.