Skip to main content

தொடர் போராட்டம்; மீனவர்கள் எடுத்த முடிவு!

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
The decision of the fishermen for continuous struggle

தமிழக கடலோரப்பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து காலவரையறையற்ற போராட்டம் நடத்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் சங்கங்கள் சார்பில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்திருந்தனர். 

அதன்படி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதைக் கண்டித்தும், மீனவர்களின் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் 700க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 18ஆம் தேதி முதல் காலவரையறையற்ற போராட்டத்தைத் தொடங்கினர். மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று (20-02-24) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதையொட்டி இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். அதன் பிறகு, மீனவ சங்க பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பிடிப்பட்ட படகுகளையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உத்தரவாதம் அளித்தார். இதனையடுத்து, மீனவர்கள் தங்களது நடைபயணப் போராட்டத்தை தற்காலிமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது