Skip to main content

“மும்மொழித்திட்டம்”என்று தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள்! - திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (3-6-2019)  காலை 10.00 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தீர்மானம் : 1

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்

கலைஞரின் பிரதிபிம்பங்களாகத் திகழ்ந்திட வேண்டும்:



சட்டமன்ற ஜனநாயகத்திற்கும்,  ஆரோக்கியமான விவாதங்களுக்கும் அடையாளமாக விளங்கிய கலைஞர் அவர்களின் பிறந்தநாளை  முன்னிட்டு நாமெல்லாம் இங்கே கூடியிருக்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக  உள்ளது. சமத்துவம், சமூகநீதி, மதசார்பின்மை, ஏழை எளிய விளிம்பு  நிலை மக்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளர்ச்சி, அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்த  அடுக்கடுக்கான சாதனைத் திட்டங்கள், ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தமிழ் நாட்டின்  சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு சாரம் நிறைந்த  சாதனைத் திட்டங்கள், இந்தியாவின் ஜனநாயகத்தைக்  காப்பாற்றுவதற்காக எண்ணற்ற போராட்டங்கள், அர்ப்பணிப்பான செயல்பாடுகள்,  தேசிய அரசியலில் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் உருவாக்கி, தனி முத்திரை படைத்த சாதுர்யம்  ஆகியவற்றின் பொருள் பொதிந்த கொள்கைக் குறியீடாக விளங்குபவர் கலைஞர்.

 

dmk



கலைஞர் ஊட்டிய தன்மான உணர்வு, அவர் ஏற்றி வைத்த சுயமரியாதைச் சுடர், இந்திய அரசியல் அரங்கில் தமிழகத்துக்கு அவர் சேர்த்த அழியாப் பெருமைகள் எல்லாம் இன்றைக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியிலும், தேசிய அரசியல் தலைவர்கள் மத்தியிலும் வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு அத்தியாயமாக விளங்குகிறது.

 



அப்படிப்பட்ட மகத்தான கலைஞரின் பிறந்த நாளினைக் கொண்டாடும் இந்தவேளையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக்  கூட்டணி அமோக வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்றத்தின்  மூன்றாவது பெரும் கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் உருவெடுத்து செம்மாந்து  நிற்கிறது. மாற்றாரும் மனந்திறந்து போற்றும்  கலைஞரின் ஜனநாயகப் பண்புகளையும், இன-மொழி உணர்வுகளையும்,சமத்துவ நெறிகளையும்,சமூகநீதி எண்ணங்களையும், சுயமரியாதைக் கருத்துகளையும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிந்தனை - சொல் - செயல் ஆகிய அனைத்திலும் அணுவளவும் பிறழாது அனுதினமும் பின்பற்றி, கலைஞர் அவர்களின் உயிரோட்டம் மிக்க பிரதி பிம்பங்களாக இந்திய நாடாளுமன்றத்திலும் - தொகுதியிலும் திகழ்ந்து, உறவுக்குக் கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுக்கும் வகையில் சீரிய செயலாற்றி, “நாம் என்றும் மக்கள் ஊழியர்களே”என்ற நற்பெயர் பெற வேண்டும் என்றும் இந்தக்   கூட்டம் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

 



தீர்மானம் : 2



தலைமைப் பண்பின் உறைவிடம் மு.க.ஸ்டாலின்.



இந்திய மாநிலங்களுக்கு எல்லாம் முதன்மை மாநிலமாக, தொலைநோக்குப் பார்வையுடன்  ஜனநாயகத்தில் மாறாத  நம்பிக்கையுள்ள கட்சிகள் இணைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைத்து, தமிழகத்திலும் புதுவையிலும் பதினேழாவது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38 தொகுதிகளிலும், 23 சட்டமன்றத் தொகுதிகளில் 14 சட்டமன்ற தொகுதிகளிலும், இந்தியாவே திரும்பிப் பார்த்துப் போற்றும் மாபெரும் வெற்றியைப் பெற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

 Decision on DMK consultation meeting



“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்”என்ற  தனிப் பெரும் முழக்கத்துடன் - கிராமத்தின் திண்ணைகள் முதல் நகரத்தின் தெருக்கள் வரை மக்களைச் சந்தித்து, அனைவரும் வியக்கும் வகையிலான கழகத் தலைவரின் ஆக்கபூர்வமான  பிரச்சாரத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு இந்த மகத்தான வெற்றியை தமிழகம் மற்றும் புதுவை மக்கள் அளித்துள்ளார்கள். இந்த வெற்றியின் மூலம் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பண்படுத்திய பைந்தமிழ் மண்ணின் பெருமை மற்றும் திராவிட இயக்கத்தின் தனிக்குணமும் போர்க்குணமும்  இந்திய அரங்கில் தனி முத்திரையுடன் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை எண்ணி இக்கூட்டம் பெருமை கொள்கிறது.

 



மதசார்பற்ற கூட்டணி மட்டுமின்றி - அதை வெற்றிக்கூட்டணியாகவும் மாற்றி - தலைமைப் பண்பின் உறைவிடமாகத்  திகழுகிறார் கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின். இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நாடாளுமன்றத்தில்,  திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவின் மூன்றாவது தனிப்பெரும் கட்சி என்று கழகத் தலைவர்  தலைமையில் கம்பீரமாக நிற்பதை இந்திய ஜனநாயகமும் பார்த்து மகிழ்கிறது - அதை இந்தக் கூட்டமும் எண்ணிப் பெருமிதம் கொள்கிறது.

 

தீர்மானம் : 3



முனைப்புடனும், ஆர்வத்துடனும்  வாக்காளர்களைச் சந்தித்திடுக!



திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின்  தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரிடமும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து கழக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கழகத்தில் உள்ள பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புக்களான கழகத் தொண்டர்கள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒருமுகமாக நின்று, மத்திய - மாநில அரசுகளின் அதிகார அத்துமீறல்கள் அனைத்தையும், அரசு இயந்திர துஷ்பிரயோகங்களையும் மன உறுதியுடன் எதிர்கொண்டு தமிழக வாக்காளர்களையும், புதுச்சேரி வாக்காளர்களையும் சந்தித்து இந்த அமோக வெற்றியை  ஈட்டியுள்ளதற்கு  இந்தக் கூட்டம் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.



வாக்காளர்களிடம் வாக்குக் கேட்கச் சென்ற அதே முனைப்புடனும் - ஆர்வத்துடனும், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள், ஒவ்வொருவரும் தத்தமது தொகுதிகளில் தவறாமல் வாக்களித்தவர்கள்  -வாக்களிக்காதவர்கள் என்ற பேதம் பார்க்காமல், அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்திட வேண்டும்.

 

 Decision on DMK consultation meeting



அதுமட்டுமன்றி, நம் கூட்டணிக்கு வாக்களித்த - வாக்களிக்க முன்வராத அனைத்து தரப்பு வாக்காளர்களின் குறைகளுக்கும் - பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் விரைந்து தீர்வு கண்டிட, தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 



“வாக்கு கேட்பது உங்கள் உரிமை. கோரிக்கைகளை முன் வைப்பது வாக்காளர்களின் உரிமை”என்பதை நினைவில் வைத்து - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் - கூட்டணிக் கட்சிகளுக்கும் இந்த மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பெருமை சேர்க்கும் வகையில் தொகுதிப்  பணி மற்றும் நாடாளுமன்றப் பணியாற்றிட வேண்டுமென்று கழக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.



 

தீர்மானம் : 4



தண்ணீர்ப்  பஞ்சத்தை நீக்க  ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்திடுக!



பருவமழை பொய்த்தது முன்கூட்டியே தெரிந்தும், எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும் நிறைவேற்றாமல், கூட்டுக் குடிநீர்த்  திட்டங்கள் பற்றியே கவலை கொள்ளாமல் “கமிஷன், கரெப்சன், கலெக்சன்”என்பதில் மட்டுமே முழுமூச்சாக ஈடுபட்டு வரும் ஆளும் அதிமுக அரசால்    தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீர்  15 ரூபாய்க்கு விற்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை லாரி டேங்கர் மூலம் குடிநீர் சப்ளை செய்யும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. மாநிலம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் - தாய்மார்கள் சாலை மறியலில் ஈடுபடும் காட்சிகள், குடிநீர்ப்  பிரச்சினை எந்த அளவிற்கு தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.



எனவே, தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க ஆளும் அ.தி.மு.க. அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் போன்ற தொலைநோக்குத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.



 

தீர்மானம் : 5



“மும்மொழித்திட்டம்”என்று  தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள்!



“இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும்”என்று பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதி, “இனி இந்தி தமிழ்நாட்டில் இல்லை”என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றி “அன்னைத் தமிழை அரியணையில் அமர வைத்த”இருமொழிக் கொள்கை, “தமிழ் கட்டாயம் கற்க வேண்டும்”என்று கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சட்டம் ஆகியவற்றிற்கும் - மொழிவாரி மாநிலங்கள், கூட்டாட்சித் தத்துவம் போன்றவற்றிற்கும் எதிராக  மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு செய்வதற்கான குழு, இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்தை பரிந்துரை செய்து,  மத்திய அரசிடம் வழங்கியது.

 

 Decision on DMK consultation meeting



அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் இந்தி கட்டாய பாடம் ஆக்கப்படும் என்ற செய்தி பரவியது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது.

 அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர்கள் அந்த அறிக்கையை, பலரையும் கலந்து ஆலோசித்த பிறகுதான், செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள். 

இது தமிழர்களை உரசிப் பார்க்கும் செயலாகும். பன்மொழி, பண்பாட்டோடு விளங்கும் ஒரு நாட்டில் மக்களின் கருத்துகளை அறியாமல் மத்திய அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாது என நம்புகிறோம்.

அதைப்போல, தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம் என்று மத்திய பா.ஜ.க.அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்வதோடு; தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு முடிவுகளையும், அது எந்த நேரத்தில் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயக வழி நின்று மிகக் கடுமையாக எதிர்க்கும் என்பதை இக்கூட்டம் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.


 

தீர்மானம் : 6



ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்பப் பெறுக - காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாக”அறிவித்திடுக.



நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட வேண்டிய காவிரி டெல்டா மாவட்டங்களை, வறண்ட பாலைவனமாக்கும் விதத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அறிவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளையும், அதற்கு அட்சரம் பிசகாமல் துணை போகும் அ.தி.மு.க. அரசையும் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

 

 

 Decision on DMK consultation meeting



விவசாயிகளும் பொதுமக்களும் ஜனநாயக ரீதியாகப்  போர்க்குரல் எழுப்பியும் அறவழிப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தியும் மத்திய மாநில அரசுகள் மீண்டும் மீண்டும் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் செயல்படுவது வேதனைக்குரியது. இதைச் சாதாரண சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக எண்ணி, போராடுபவர்களைக் கைது செய்வது, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் காரியமாகும்.நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையையும், அதற்கு உயிரோட்டமாக இருக்கும் விவசாயிகளையும் மத்திய மாநில அரசுகள் துளியும் மதிக்காமல் செயல்படுவது மக்களாட்சி இலக்கணத்திற்கு  நிச்சயம் அழகு சேர்க்காது.  ஆகவே விவசாயிகளின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, மறுசிந்தனை ஏதுமின்றி, திரும்பப் பெற வேண்டும் என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக”உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் மத்திய பாஜக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்