விருதுநகர் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டியளித்தபோது “அதிமுகவைப் பார்த்துத்தான் பிற கட்சிகள் பயப்படுகின்றன. அமமுகவைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை. இடைத்தேர்தலில் பந்தயக்குதிரையை விடும்போது, நல்ல குதிரையா? ஓடும் குதிரையா? என்று பார்த்துத்தான் விடவேண்டும். சப்பாணி குதிரையை யார் வேண்டுமானாலும் களம் இறக்கலாம். நாங்கள் தாமதம் செய்யவில்லை. சரியான நேரத்தில் சரியான வேட்பாளரை நிறுத்துவோம்.” என்றார். அமைச்சரின் பேட்டி, ‘சப்பாணி குதிரையைக் களமிறக்க அதிமுக தயாராக இல்லை’ என்ற தலைப்பில் நாளிதழ்களில் வெளியானது.
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டியின் போது சொன்ன அந்த வார்த்தையைக் கண்டித்து, டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர், பேராசிரியர் தீபக், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கொஞ்சம் நாவடக்கம் தேவை!
எங்கள் இயலாமையை இழித்துப் பேசித்தான் உங்கள் அரசியல் எதிரியை விமர்சிக்க வேண்டுமோ?
என்ன அரசியல் கற்றீறய்யா நீர்?
இதுதான் உங்கள் அரசியல் நாகரீகமோ?
ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனுடையோர் ஒன்று சேர்ந்து, ‘நாகரீகமான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை, சென்னைப் பிரகடனத்தின்போது, ஒரே குரலில் எழுப்பியுள்ளோம் என்பதை அவருக்கு உரைக்கும் படி சொல்ல வேண்டும்.
அமைச்சரே நாவடக்கம் தேவை!’ என்று கூறியிருக்கிறார்.
காலம் மாறிவிட்டது. நினைத்ததையெல்லாம் பொதுவெளியில் பேசிவிடக் கூடாது. சகலரும் இதை உணரவேண்டும்.