Skip to main content

மூத்த படைப்பாளி இயக்குனர் மகேந்திரன் மறைவு தமிழ் திரை உலகிற்கும், தமிழ்த் தேசிய இனத்திற்கும் நேரிட்ட பேரிழப்பு-சீமான்

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

உடல்நலக்குறைவால் இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகு இறுதி சடங்கு இன்று மாலை சென்னையில்  5 மணிக்கு நடைபெற இருக்கிறது.  சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இயக்குனர் மகேந்திரன் மறைவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்   வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

mahendran

 

நாடகங்களிலிருந்து அறிவியல் கண்டுபிடிப்பான திரை வடிவத்திற்கு கலை வடிவம் மாறுதல் பெற்றாலும் நாடகங்களின் இறுக்கமான கதைசொல்லல் முறைமையையும், நுட்பமான உணர்வுகள் அற்ற நடிப்பு முறைமையையும் திரைக் கலை கைவிடாமல்  நாடகப் பாணியிலான  திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில்..இயல்பான காட்சிகள், அசலான மனிதர்கள் , வியக்க வைக்கும் திரைக்கதை என தமிழ் திரையுலகிற்கு புது ரத்தம் பாய்ச்சிய மாமேதை மறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள். அவருடைய உதிரிப்பூக்கள் உலகத் திரைப்பட வரிசைக்கு தமிழ் திரை உலகின் மறக்கமுடியாத பூங்கொத்து. புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்கின்ற சிறு நாவலை தழுவி உருவாக்கப்பட்ட உதிரிப்பூக்கள் திரைப்படக் கலையை பயில விரும்பும் மாணவர்களுக்கு முதன்மைப் பாடமாக இன்னுமும் திகழ்கிறது. அதேபோல இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்த முள்ளும் மலரும் தமிழ் திரையுலகின் மறக்க முடியாத மாபெரும் படைப்பாக திகழ்ந்து வருகிறது. காட்சிகளின் இடையே நிகழுகின்ற வேதியியல் மாற்றத்தை சரியாகப் புரிந்துகொண்டு உயிரோட்டமாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் இயக்குனர் மகேந்திரன் ஒரு மாமேதை.

 

கதாபாத்திரங்களின் நுட்பமான உணர்வுகளை, மென்மையான காட்சிகள் மூலம் அழகாக திரையில் வடித்தெடுப்பதில் அவருக்கு இணையானவர் இந்திய திரை உலகில் எவரும் இல்லை.

 

தனது இறுதி காலத்தில் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தேர்ந்த நடிகராகவும் நடித்து புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர் ‌. சிறந்த எழுத்தாளர். அவரின் கலைத் திறமையை கண்டு கவரப்பட்ட நம் தேசிய தலைவரும் என்னுயிர் அண்ணனும் ஆகிய மேதகு வே பிரபாகரன் அவர்கள் நேரில் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து இயக்குனர் மகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து திரைப்படக் கலை குறித்து விவாதித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு.

 

mahendran

 

தமிழ் தேசிய இனத்தின் ஆற்றல்மிக்க கலையாளராக தமிழ் திரை உலகின் மூத்த படைப்பாளியாக திகழ்ந்த இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் தமிழ் திரை உலகின் மாபெரும் இழப்பில் அவர்களோடு ஒருவனாக நானும் பங்கேற்கிறேன். மாமேதை இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தமிழ் திரைக்கலையின் மகத்தான மகுடம் ஐயா இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கொங்கு சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்' - வைகோ இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

மதிமுக எம்.பி.யின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ‘அன்பு சகோதரரை இழந்துவிட்டேன். அன்புச் சகோதரர், கொங்கு சீமையின் கொள்கை காவலர் கணேசமூர்த்தியை இழந்துவிட்டேன். கொங்கு சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கணேசமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.