பெங்களூரு சிறையில் மறைந்த வீரப்பனின் கூட்டாளியான சைமனின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

1993ஆம் ஆண்டு மாதேஸ்வரன் மலை, சுரக்கா மடுவு என்ற இடத்தில் வீரப்பன் குழுவினரால் கண்ணி வெடி வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டது. அதில் 24 போலீசார் உயிரிழந்தார்கள். அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, மைசூர் சிறையில் இருந்தவர் சைமன். முதலில் ஆயுள் தண்டனையாகவும், பின்னர் மரண தண்டனையாகவும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகாலமாக சிறையிலிருந்த சைமனுக்கு சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி இரவு மைசூர் சிறைக்குள்ளேயே சைமன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கர்நாடக போலீசார் சைமனை மைசூர் விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சைமனின் உடல் நேற்றிரவு பிரேத பரிசோதனை நிறைவு பெற்று அவரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, சைமனின் சொந்த ஊரான கர்நாடகாவில் உள்ள கொள்ளைக்கால் மாவட்டம் ஒட்டர்தொட்டி கிராமத்திற்கு சைமனின் உடலை கொண்டு சென்ற அவரது உறவினர்கள் அங்கு அவரை அடக்கம் செய்தனர்.

Advertisment

இந்நிலையில், சைமன் இயற்கையாக இறக்கவில்லை. அவரை மருத்துவ சிகிச்சைக்குக்கூட சிறை நிர்வாகம் அழைத்துச்செல்லவில்லை. அவரது இறப்பு மீது சந்தேகம் உள்ளது. இதில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது என மனித உரிமை அமைப்பினர் அடுத்தக்கட்டமாக கர்நாடக சிறைத்துறை மீது வழக்கு போட உள்ளதாக கூறியுள்ளனர்.