Skip to main content

“சுய அறிவு உள்ளவர்கள் எமர்ஜென்சி கதவை திறக்க மாட்டார்கள்” - வைரலாகும் தயாநிதிமாறன் வீடியோ

 

dayanidhimaran mp release video about emergency door plane going viral

 

கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணம் செய்திருந்தனர். அந்த விமானம் சென்னையில் இருந்து திருச்சி புறப்படும்போது விமானத்தின் அவசரக்கால கதவைத் திறந்ததாகத் தகவல் வெளியாகி சர்ச்சையானது. மேலும் இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “விமானத்தில் அவசர வழி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் தவறுதலாகக் கதவு திறக்கப்பட்டதாக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார்” என விளக்கம் அளித்திருந்தார். 

 

ஆனால் அண்ணாமலை, விமானத்தில் அவசர வழி கதவை பாஜக எம்.பி. தேஜஸ்வி திறக்கவில்லை. அவர் தனது கையை அந்தக் கதவின் மேல் வைத்திருந்தார். அந்தக் கதவு சரியாக மூடாமல் இருந்ததால் அதை விமானப் பணிப்பெண்களின் கவனத்திற்குத் தான் தேஜஸ்வி கொண்டு வந்தார். அதன்பின்னர் தான் விமானப் பணிப்பெண்கள் அதைப் பார்த்தனர். இது அவரது கடமை. அவர் எவ்வகையிலும் அந்தக் கதவைத் திறக்கவில்லை” என வேறு மாதிரி ஒரு கதையை கூறினார்.

 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “வாழ்க தமிழ்நாடு, நான் இண்டிகோ விமானத்தில் கோவை சென்று கொண்டிருக்கிறேன். நான் விமானத்தின் அவசர கால கதவு பக்கத்தில் இருக்கும் இருக்கையில்  அமர்ந்துள்ளேன். ஆயினும், நான் அவசரகால கதவை திறக்கபோவதில்லை. ஏனென்றால், நான் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த கதவை திறப்பதால் பயணிகளுக்கு ஆபத்து. சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இந்த காரியத்தை செய்யமாட்டார்கள். அத்துடன் எனக்கு மட்டுமில்லாமல் அனைத்து பயணிகளுக்கும் பயண நேரம் 2 மணிநேரம் மிச்சமாகும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை இணையவாசிகள் பலரும் சுட்டிக்காட்டி அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !