குடியுரிமை சட்டம் எனும் கொடூர சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள அதிமுக வரும் தேர்தலுக்குப் பின்னர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் என்று தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் தாவூத் தெரிவித்தார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வகையான போராட்டத்திற்கு இடையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருவாரூர் ரயில் நிலையம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட அதன் மாநில செயலாளர் தாவூத் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக ஜனநாயக வழியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் டெல்லியில் வேண்டுமென்றே வன்முறையை தூண்டி நியாயமான அறவழியில் போராட்டத்தை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்து வருவதாக கூறும் தமிழக அதிமுக அரசு, அவர் மறைந்த பின்னர் மத்திய அரசுடன் உறவில் இருக்கிறோம் என்கிற பெயரில் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்யும் விதமாக அவருக்கு எதிரான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதுடன், தமிழகத்தின் உரிமைகளையும் பறிகொடுத்து வருகிறது.
அதன் காரணமாக அதிமுகவின் செல்வாக்கு சரிந்து வருவது ஒரு புறம் என்றாலும், வரும் தேர்தலில் அதிமுக என்ற ஒரு கட்சி இருந்ததா என்று கேட்கும் அளவிற்கு முஸ்லிம்களும் மற்றும் தமிழர்களும் பாடம் புகட்டுவதற்காக காத்திருக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்." என்றார்.