Skip to main content

பிரம்பு வைத்திருந்த மனைவி; “இது வேலைக்கு ஆகாது” என வேகமாக வெளியேறும் ரமேஷ்; வீடியோ வெளியாகி பரபரப்பு

Published on 31/01/2023 | Edited on 01/02/2023

 

Dancer Ramesh Case; A new video has been released

 

டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர்களை போல் நடனமாடி மக்களைக் கவர்ந்தவர் டான்சர் ரமேஷ். 42 வயதான இவர் மூர் மார்க்கெட் பகுதியில் தனது முதல் மனைவியுடன் வசித்து வந்தார். இவரது இரண்டாம் மனைவியின் வீடு புளியந்தோப்பு கே.பி.பார்க் அருகே தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் கட்டடத்தில் உள்ளது.

 

கடந்த 27 ஆம் தேதி ரமேஷுக்கு பிறந்தநாள் என்பதால் தனது இரண்டாம் மனைவியை சந்திக்கச் சென்றுள்ளார். தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் 10 மாடிகள் கொண்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியிலிருந்து ரமேஷ் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரமேஷ் சமூக வலைத்தளம் தவிர தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர். இவரது தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையில் பிறந்தநாள் என்பதால் ரமேஷ் தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியின் போது அவருக்கும் அவரது உறவினருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பின்பே ரமேஷ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

ரமேஷினை தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது மனைவி தரப்பில் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் மனைவி தரப்பில் தனது கணவர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறி வந்த நிலையில் ரமேஷின் மரணம் குறித்து மர்மச்சாவு 174 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

 

இந்நிலையில் டான்சர் ரமேஷ் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மது போதையில் இருப்பது போல் உள்ள ரமேஷ் கையில் மேஜை மின்விசிறியை வைத்துக் கொண்டு அருகில் இருந்தவரிடம் “ரொம்ப அடிச்சிட்ட மா நீ” எனக் கூறுகிறார். தொடர்ந்து செல்போனைப் பார்த்து பேசும் அவர், “இதோ பாருங்க, எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இதில் யாருக்கும் சம்பந்தம் இல்லை. குடிக்க பணம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். அதனால் நான் சாகிறேன். இதற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. வேலைக்குப் போகச் சொல்கிறார்கள். சம்பாதிக்க சொல்கிறார்கள். வேலைக்கு ஆகாது. நம்மால் முடியாது. அதனால் இப்பொழுது நான் சாகப்போகிறேன்” எனக் கூறுகிறார். வீடியோவின் இறுதியில் கையில் வைத்திருந்த மின் விசிறியை கீழே வீசிவிட்டு இது வேலைக்கு ஆகாது என சொல்லி வேகமாக வெளியேறுகிறார்.

 

தொடர்ந்து இரண்டாவது மனைவி தன் கணவரை கடுமையாக தாக்குவதாக முதல் மனைவி குற்றம் சாட்டிய நிலையில் அந்த வீடியோ பதிவில் இரண்டாம் மனைவி கையில் பிரம்புடன் அமர்ந்துள்ள காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? அதை எடுத்தது யார்? டான்செர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்