Skip to main content

வகுப்பறை இடிப்பு; பொதுமக்கள் சாலை மறியல் 

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

cuddalore virudhachalam nearest panchayat elementary school issue

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வண்ணாங்குடிகாடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், இப்பள்ளி வளாகத்தில் இருந்த பழைய வகுப்பறை கட்டடங்களை இடித்து விட்டு, புதிய பள்ளிக் கட்டடம் கட்டப் போவதாகக் கூறி ஊராட்சி நிர்வாகம் சார்பில் பழைய பள்ளிக் கட்டடத்தை இடித்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொடக்கப்பள்ளியில் பயிலக்கூடிய மாணவ மாணவிகள் போதிய வகுப்பறை கட்டட வசதி இல்லாததால் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள நடுநிலைப் பள்ளிக்குச் சென்று பயிலக் கூடிய அவல நிலை இருந்து வருகிறது.

 

இந்நிலையில் வண்ணாங்குடிகாடு கிராமத்தின் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி, தன்னிச்சையாக செயல்பட்டு புதிய பள்ளிக்கூடம் கட்டுவதாகக் கூறப்பட்ட பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கிராம மக்கள், மாணவர்களின் நலனுக்காக பள்ளி கட்டடங்கள் கட்டக் கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதில் தீவிரமாக இருந்துள்ளது. அதையடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து,  வண்ணாங்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள், கையில் பதாகைகளை ஏந்தி விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மறியல் போராட்டத்தின் போது ஏற்கனவே தங்களது கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ள நிலையில் எதற்காக புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட வேண்டும் என்றும்,  போதிய வகுப்பறை கட்டட வசதி இல்லாமல் மாணவர்கள் அவதி அடைந்து வரும் நிலையில், புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டும், அலட்சியமாக செயல்படும் ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலையில் படுத்துக் கொண்டும், மரத்தை வெட்டி சாலை நடுவே குறுக்கே போட்டுக் கொண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்றதால்,  விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி  அலுவலர், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியை நிறுத்துவதாகக் கூறிய பின்பு சாலை மறியலைக் கைவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.