Skip to main content

தரமற்ற முறையில் கட்டப்படும் பள்ளியின் கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்! 

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

CUDDALORE DISTRICT SCHOOL BUILDING CONSTRUCTION

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதிக்குட்பட்ட கொடிக்களம் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட நல ஆரம்பப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கொடிக்களம் மற்றும் நெய்வாசல் பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலும், பள்ளிக் கட்டிடம் பழுதடைந்துவிட்டதாலும் அப்பகுதி மக்கள் அப்பள்ளியைச் சீரமைப்பு செய்யக்கோரிக் கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

 

பொதுமக்களின் தொடர் போராட்டத்தின் வாயிலாக, கடந்த ஆண்டு தமிழக அரசு புதிதாகப் பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமானப்பணி நடைபெற்றதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

 

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கட்டுமான பணியில் தரமற்ற முறையில் கட்டிடங்கள் கட்டி வருவதாகக் கூறி ஒப்பந்ததாரர்களைக் கண்டித்து ஊர் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து கட்டிடக் கட்டுமான பணியைத் தடுத்து நிறுத்தினர். மேலும் கட்டுமான பணியில் ஈடுபடும் கட்டுமான தொழிலாளர்கள் இரும்பு கம்பிகளைப் பயன்படுத்தாமல், சிமெண்ட் கலவை கொண்டு மட்டும் கட்டிடம் எழுப்புவதாகப் புகார் அளித்து, தரமான கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

CUDDALORE DISTRICT SCHOOL BUILDING CONSTRUCTION


அதன்பின்பு ஊர் முக்கியஸ்தர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்த்து ஆய்வு செய்ததின் பேரில் தரமாகக் கம்பிகள் போட்டுக் கட்டித் தருவதாக உறுதியளித்தனர். ஆனால் மீண்டும் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தாமல் தரமற்ற முறையில் சிமெண்ட் கலவையைக் கொண்டு கட்டுமான பணி நடைபெற்று வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் உட்பட அனைவரும் கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்தி, பள்ளிக்கட்டிடம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், " பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு புதிய பள்ளிக் கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. தரமற்ற முறையில் கட்டிடம் கட்டுவதை  ஒப்பந்ததாரர்கள் கைவிட வேண்டும். பள்ளிக் குழந்தைகள் படிக்கும் கட்டிடத்தைத் தரமான முறையில் கட்டித் தரவேண்டும்" எனத் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
High Court takes action for Cancellation of the case filed by the ed 

சென்னையில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப் ஸ்பேஷஸ் என்ற நிறுவனத்தை எஸ்.பி. பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து தொடங்கி நடத்தி வந்தனர். அதன் பின்னர் தொழிலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இத்தகைய சூழலில் நிறுவனத்தில் இருந்து தனக்கு சேர வேண்டிய பங்கை எஸ்.பி. பீட்டர் தர மறுப்பதாக கூறி ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் எஸ்.பி. பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என எஸ்.பி. பீட்டரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அதனை தொடர்ந்து சுமார் ரூ. 50 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு எஸ்.பி. பீட்டருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பபட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி. பீட்டர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்சனையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு. அமலாக்கத்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பித் தர அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தனர்.

High Court takes action for Cancellation of the case filed by the ed 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தரமோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (05.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. எஸ். ராமன் வாதிடுகையில், “நிறுவனத்திற்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது” எனத் தெரிவித்து உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். இதனையடுத்து அமலாக்கத்துறை சார்பில், “மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக் கோரி மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள்,“ மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது. எனவே அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் அமலாக்கத்துறையின் சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களை நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.