Skip to main content

கரோனா ஊரடங்கு முடிந்தும்.. முடியாத மழை.. கவலையில் மண் பாண்ட உற்பத்தியாளர்கள்..!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

cuddalore district pot manufacturer affected by continues rain


பொங்கல் பண்டிகையின்போது பெரும்பாலான வீடுகளில் மண் பானையில் பொங்கல் வைத்து படையலிட்டு, சூரியனுக்கும், தங்கள் விவசாய வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் படையலிட்டு வழிபடுவார்கள். பொங்கல் தினத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே மண்ணால் மண்பாண்டங்கள் செய்யப்பட்டு அவைகளை வெயிலில் நன்கு காயவைத்து பிறகு நெருப்பு சூளையில் அடுக்கி வைத்து சுடப்பட்டு விற்பனை செய்யப்படும். இப்படி தயாரிக்கப்பட்ட புதுப்பானை புது அடுப்புகளை வாங்கி செல்வார்கள். அதில் வைத்தே பொங்கல் இடுவார்கள். 
 


கடலூர் மாவட்டத்தில், கடலூர் சாவடி மற்றும் பெண்ணாடம் திருவட்டத்துறை போன்ற பல பகுதிகளில் மண் பாண்டங்கள் உற்பத்தி செய்து அதை சூளையில் வைத்து சுட்டு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இதற்காக டிசம்பர், ஜனவரி மாத துவக்கத்திலேயே மண்பானைகள் உற்பத்தியை துவக்கிவிடுவார்கள். ஆனால், கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக புயல், தொடர் மழை என தொடர்ந்து இயற்கை இடர்பாடுகளுக்கு உள்ளாகிவருவதால், இந்த மண் பாண்ட தொழிலுக்கு தேவையான மண் சேகரிப்பதிலும் அதை பொருட்களாக தயார் செய்து காய வைக்க அதற்கான வெயிலும் சுத்தமாக அடிக்கவில்லை. 
 


அதற்காக சேகரிக்கப்பட்ட மண்ணும் மழையில் கரைந்து போய்விட்டன. இதனால், மண்பாண்டங்களை உற்பத்தி செய்ய முடியாமல் மண்பாண்டத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 9 மாதங்களாக கரோனா நோய் பரவல் காரணமாக மண்பாண்ட உற்பத்தி நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வினால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவையான மண் பாண்டங்கள், அடுப்புகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் தங்கள் குடும்பத்தின் வறுமையில் இருந்து மீளலாம் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கனவு கண்டு கொண்டிருந்தனர். 

 

அவர்கள் கனவிலும் எண்ணத்திலும் மழையின் காரணமாக மண் விழுந்துவிட்டது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்கிறார்கள் மண் பாண்டத் தொழிலாளர்கள். இதனால், வறுமை எங்கள் குடும்பங்களில் தாண்டவமாடுகிறது என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்; ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Surcharge on omni buses; A fine of Rs.36 lakh was collected
கோப்புப்படம்

பொங்கல் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தமிழக போக்குவரத்து சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரத்து 650 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.36.55 லட்சம் தமிழக போக்குவரத்து சார்பில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரை முறைப்படுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பதிவு செய்து தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்று பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் தடையில்லா சான்று பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் மறுபதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிற மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.