Skip to main content

கரோனா தடுப்பூசி போடுவதாகக் கூறி நகைகளைக் கொள்ளையடித்த பெண் கைது! 

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

CUDDALORE DISTRICT , CORONAVIRUS VACCINE POLICE INVESTIGATION

 

கடலூர் மாவட்டம், இராமநத்தம் அடுத்துள்ள லெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் தந்தை ஆதிமூலம், உடல்நலக் குறைவால் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து அவர் ஆட்டோவில் வீடு திரும்பும் போது, தொழுதூர் பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடிக்காட்டைச் சேர்ந்த வெங்கடேஸ் என்பவரின் மனைவி சத்யப்பிரியா (வயது 26) என்ற உறவுக்காரப் பெண்ணைப் பார்த்துள்ளார். 

 

சத்யப்பிரியா, தான் பிறந்த ஊரான மங்களூருக்குச் செல்ல வந்ததாகவும், பஸ் இல்லாததால், பேருந்துக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். மேலும், கிருஷ்ணமூர்த்தியுடன் ஊருக்கு வருவதாகக் கூறி, அவருடன் ஆட்டோவில் ஏறி லெக்கூர் சென்றுள்ளார். பிறகு, கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் சத்யப்பிரியவை விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது சத்யப்பிரியா, கிருஷ்ணமூர்த்தியிடம் இரவு இங்கேயே தங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார். பிறகு, வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராஜாத்தி (வயது 40), கீர்த்திகா (வயது 20), மோனிகா (வயது 18) ஆகிய மூவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாகப் போடுவதாக ஆசை வார்த்தைக் கூறி தான் கொண்டு வந்த மயக்க ஊசியைப் போட்டுள்ளார்.

 

மேலும், இரவு வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்தியிடமும் நைசாகப் பேசி கரோனா தடுப்பூசிப் போடுவதாகக் கூறி மயக்க ஊசியைப் போட்டுள்ளார். இதையடுத்து, அனைவரும் மயக்கம் அடைந்த நிலையில், ராஜாத்தி அவரது மகள்களான கீர்த்திகா, மோனிஷா ஆகியோர் அணிந்திருந்த 30 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகள், கழுத்தில், காதில், கையில் இருந்த நகைகள் எதுவும் இல்லாததால், அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் உறவுக்காரப் பெண் சத்யப்பிரியாவை தேடி அலைந்தனர். 

 

பின்னர், இராமநத்தம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, சத்யப்பிரியாவை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Judgment after approximately 5 years; A twist in the case of AIADMK leader Panchanathan

 

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.