Skip to main content

தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய மினிலாரி... 7 பேர் படுகாயம்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

cuddalore district, chidambaram area vehicle incident government hospital


மினிலாரி தாறுமாறாக ஓடியதில், ஏற்பட்ட விபத்தால் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22 வயது). இவர் நேற்று (01/02/2021) ஊரிலிருந்து மினிவேனில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, சிதம்பரம் அண்ணாமலை நகரில் இறக்கிவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலைநகர் ரயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்கியபோது அதிவேகமாக வந்த மினிலாரியில் எதிர்பாராத விதமாக பிரேக் பிடிக்காமல் போகவே, மினிலாரி தாறுமாறாகச் சென்றுள்ளது. அப்போது, சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே வெளிப்பகுதியில் பழக்கடை வைத்திருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (70), அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்திருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த வீரமணி (65), கருப்பூரைச் சேர்ந்த சாலையோர வியாபாரி இந்திராணி (60) ஆகியோர் மீது மோதியது.

 

மேலும், பேருந்து ஏறுவதற்காக அங்கு நின்றிருந்த மேலகுறியாமங்கலத்தைச் சேர்ந்த நந்தினி (19), ஸ்ரீராம் (19), உத்தமசோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (65), புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் (22) ஆகிய 4 பேர் மீதும் மோதியது. இதில் 7 பேரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 7 பேரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து டிரைவர் விக்னேஷை கைது செய்தனர். இந்த விபத்து குறித்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்