/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_798.jpg)
திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் திருமுருகன் - ஷியமாளா தம்பதியர். திருமுருகன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷியமாளா 9 மாத கர்ப்பிணி. பிரசவம் பார்ப்பதற்குச் சென்னையிலிருந்து திருவாரூர் வழியாகத்தங்கள் சொந்த ஊருக்குரயிலில் கணவர் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த ரயில் விழுப்புரம் கடந்த போது நிறைமாத கர்ப்பிணி ஷியமாளாவுக்கு வலிப்புஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டுள்ளார்.
மனைவிக்கு ஏற்பட்ட நிலை கண்டு திருமுருகன் துடித்துப் போனார். உடனடியாக அங்கிருந்தபயணிகள் இது குறித்து ரயில் காப்பாளரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அருகில் மருத்துவமனை இருக்கும் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துவதற்கு முடிவு செய்தனர். திருமுருகன் மருத்துவமனையில் சேர்க்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். கடலூரை நெருங்கிக் கொண்டிருந்தது ரயில், அதற்குள் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் 108 ஆம்புலன்ஸை டிரைவர் பெஞ்சமின் பிராங்கிளின் தயாராக நிறுத்திவிட்டு சியாமளாவின் கணவர் திருமுருகனுக்கு தகவல் தெரிவித்தார்.
ரயில் காப்பாளர், கர்ப்பிணிப் பெண் சியாமளாவின் நிலைமையைக் கருதி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தம் இல்லாதபோதிலும் ரயிலை நிறுத்தினார். ரயிலில் மயக்க நிலையில் இருந்த ஷியாமாளாவை பயணிகள் உதவியுடன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து 108 ஆம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வந்து ஏற்றினர். அதற்குள் முன்னேற்பாடாக கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மகேஸ்வரி ஷியாமளாவின் உடனடி பிரசவத்திற்கு தயார் நிலையில் இருந்தார்.
ஷியாமளா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஷியமாளா வலிப்பு நோய் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்தபோதும் அமினா கொடுத்து பிரசவம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குழந்தை இறந்து பிறந்தாலும் பரவாயில்லை என்று தாயையாவது காப்பாற்ற வேண்டும் என்றமுயற்சியில் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், நல்லபடியாக குழந்தையும் பிறந்தது.தாயும் நலமுடன் உள்ளார். இதனைத் தொடர்ந்து கணவர் திருமுருகன் மருத்துவக்குழுவுக்கும்ஆம்புலன்ஸ் குழுவினருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இது குறித்து அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மருத்துவமனைக்கு விரைந்து, தாய் மற்றும் குழந்தை இருவரையும் பார்த்து நலம் விசாரித்தார். இக்கட்டான சூழ்நிலையில் திறம்படச் செயல்பட்டு இரு உயிரையும் காப்பாற்றிய மருத்துவர் மகேஸ்வரி அவரது குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் பாராட்டினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)