Skip to main content

ஆய்வகத்தில் இருந்த அமிலத்தால் பள்ளி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

cuddalore chidambaram aided school student lab incident he admitted in icu 

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அப்துல் சத்தார் மகன் முகமது பாரூக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது பள்ளி வகுப்பறையில் மின்விசிறி பழுதானதால் ஆசிரியர் மாணவர்களை அருகில் உள்ள ஆய்வகத்தில் அமர வைத்துள்ளார். அப்போது மாணவன் தொடையில் ஏதோ அமிலம் பட்டு அரிப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு ஆசிரியர் ஒருவர் மாணவனைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி விட்டு வரக் கூறியுள்ளார்.

 

இதை தொடர்ந்து அவர் வகுப்பில் இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்றபோது மாலை 6 மணிக்கு வீட்டில் மயங்கி விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது உடனடியாக மாணவனை சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவனின் உடலில் பட்ட அமிலமானது சுவாசத்தின் மூலம் ரத்தத்தில் கலந்துள்ளதாகத் தெரிவித்ததோடு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகப் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

 

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் கூறுகையில், "மாணவன் வகுப்பறையில் அமிலம் பட்டு எரிச்சல் ஏற்பட்டுள்ளது எனக் கூறியவுடன் ஆசிரியர் தண்ணீரைக் கொண்டு கழுவி விட்டு வரக் கூறியுள்ளார். பின்னர் மாணவனும் கழுவி விட்டு, தொடர்ந்து இரண்டு பாட வகுப்புகளைக் கவனித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த தகவல் கேள்விப்பட்டு பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் 2 நாட்களாக மருத்துவமனையில் உள்ளோம்" என்றார்.

 

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் கடலூர் மண்டல செயலாளருமான ஹமீத் பரோஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளியில் சரியான பராமரிப்பு செய்யப்படுகிறதா எனக் கவனம் செலுத்தாத நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே இந்த சம்பவத்திற்கு காரணம். மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்குப் போராடி வரும் மாணவனின் உயிரைக் காப்பாற்ற உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலீசுக்கே விபூதி; ரா அதிகாரி என மிரட்டிய போலி அதிகாரி கைது 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Vibhuti to the police; Fake officer who threatened to be RAW officer arrested

கடலூர் மாவட்ட  காவல்துறையினர் மற்றும் சில பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசியவர் ரா உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும் டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் மகனை கைது செய்ய வந்துள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியுள்ளார். இந்த தகவல் உண்மை என நம்பிய காவல்துறை  அதிகாரிகள். கைது நடவடிக்கைக்கு தேவையான காவலர்களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை இருக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிதம்பரம் நகர காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய முறையில் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் ரா அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த நீல ஒளி மகன் சிவசுப்பிரமணியன் ( 35)  எனவும் இவர் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டய படிப்பு முடித்துள்ளதாகவும், இவர் மும்பை பகுதியில் பணியில் இருந்த போது போதை பொருட்களுக்கு அடிமையாகி செங்கல்பட்டு போதை  மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்றும் தெரியவந்தது.

புதன்கிழமை இரவு சிதம்பரம் நகர போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

கால்நடை மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; பாமக புகார்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
There is no doctor in the veterinary hospital in Trichy Palakarai

திருச்சி பால்க்கரையில் செயல்பட்டுவரும் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் வராததாக் மக்கள் அவதியுறுவதாக பாமகவினர் புகார் அளித்துள்ளனர். திருச்சி பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் பி.கே.திலீப்குமார் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பன்முக கால்நடை மருத்துவமனை இருந்து வருகிறது. ஆனால் பன்முகம் என்றால் 24 மணி நேரமும் 8 மணி நேரத்திற்கு ஒருவர் என்ற வீதம் 3மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் மருத்துவர்கள் இருந்தும் இதுவரை ஒரு மருத்துவர் கூட கால்நடை மருத்துவமனைக்கு பணிக்கு வருவதில்லை. அதுமட்டுமல்லாமல் திருச்சி மாநகரில் உள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் நாய் செல்ல பிராணிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள் மருத்துவர்கள் வருவார் என்று  சொல்லி கொண்டே கால்நடைகளை எதிரே உள்ள தனியார் மருந்து கடைகளில் மருந்து வாங்கி வாருங்கள் என்று சொல்லுகிறார். 

அதையும் மீறி மருத்துவர்கள் இல்லையா? என்று பொதுமக்கள் கேட்டால் சரிவர பதில் எதுவும் சொல்வதில்லை. எனவே சம்மந்தப்பட்ட அரசு ஊதியம் பெறும் மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாகவும்,திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட பாமக சிறுபான்மை பிரிவு தலைவர் அரிஹரன், பாலக்கரை பகுதி செயலாளர் மரக்கடை கண்ணன், மலைக்கோட்டை பகுதி முருகானந்தம், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன், மற்றும் பா.ம.க.உறுப்பினர்கள் விஜி. நிர்மல், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.