Skip to main content

‘96’ பாணியில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம்..! 37 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்..!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

Cuddalore bhuvanagiri government school Alumni met after 37 years ..!


கடலூர் மாவட்டம், புவனகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘சங்கமம்’ என்ற பெயரில் நடந்தது. கடந்த 1983 - 1984ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதள குழு மூலம் ஒன்றிணைந்தனர். பின்னர் அதில் தங்களது பழங்கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி ஜன 10ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தனர்.



இதையொட்டி முதலில் விழா நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே பள்ளியை சுத்தம் செய்து புனரமைத்தனர். பிரதான பள்ளி கட்டடத்திற்குப் பெயின்ட் அடித்து அழகுபடுத்தினர். பள்ளியில் தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று, பட்டு வேட்டி சட்டையுடன் அழைப்பிதழ் கொடுத்து அழைத்தனர். பின் பள்ளி வளாகத்தில் காலை வழிபாட்டுக் கூட்டம் நடக்கும் இடத்தில் இன்று (11/01/2021) நிகழ்ச்சியைத் தொடங்கினர்.

 

இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று பள்ளி தொடங்குவதுபோலவே  நிகழ்ச்சியைத் தொடங்கினர். அப்போது ஆசிரியர்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர் பி.ஜி.கே.முத்து, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் முகமது கான், வெங்கடேசன், அப்துல் கனி, வேல்முருகன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டு வேட்டி சட்டையுடன் விழாவிற்கு வந்திருந்த ஆசிரியர்களை மாணவர்கள் ஒன்று சேர்ந்து மேடையில் அமர வைத்தனர். பின்னர் அவர்களுக்கு சால்வை அணிவித்தும், சந்தன மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். பின்னர் நினைவுப் பரிசும் வழங்கி ஆசி பெற்றனர்.

 

ஆசிரியர்களை வரவேற்கும் விதமாக நிகழ்ச்சி நடந்த இடத்தில் சிறிய செயற்கை செடிகள் உருவாக்கப்பட்டு, அதில் ஆசிரியர்களின் வண்ண புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தி பேசினர். பின்னர் மாணவர், ஆசிரியர்கள் கலந்துரையாடினர். அப்போது மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் மலரும் நினைவுகள் குறித்து பேசி மகிழ்ந்தனர்.

 

இதைத் தொடர்ந்து, தங்களுடன் படித்து பல்வேறு காரணங்களால் உயிரிழந்த முன்னாள் மாணவர்களை நினைவுகூறும் வகையில், முன்னாள் மாணவர்களின் உருவப்படங்களை ஆசிரியர்கள் திறந்து வைத்தனர். இதையடுத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இறந்த மாணவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது உயிரிழந்த தங்களது சக மாணவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் பள்ளிக் கல்விக்கான செலவு முழுவதையும் ஏற்பதாக முன்னாள் மாணவர்கள் அறிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் பழங்கால புகைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களின் கருத்துக்கள் போன்றவற்றை குறும்படமாக தயாரித்து, அதை திரையில் வெளியிட்டனர். அனைவரும் இதைப் பார்த்து ரசித்தனர்.

 

தமிழகத்தில் காவல்துறை, கல்வித்துறை, தலைமைச் செயலகம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல மாணவர்கள் சுயமாக தொழில் செய்து தொழிலதிபர்களாகவும் வளர்ந்துள்ளனர். இது தவிர முன்னாள் மாணவர்கள் சிலர் அந்தமான், டெல்லி, ஐதராபாத் போன்ற பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த முன்னாள் மாணவரான வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் என்பவருக்கு அன்று பிறந்தநாள். இதையொட்டி அங்கேயே அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறி அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

 

Cuddalore bhuvanagiri government school Alumni met after 37 years ..!

 

சில மாணவர்கள் சவுதி, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் வேலை செய்து வருகின்றனர். விழாவில் பங்கேற்க இயலாத வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய வாழ்த்துச் செய்திகளையும் இந்த விழாவிற்காக அனுப்பியிருந்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

 

இதையடுத்து ஆசிரியர்கள் விடைபெற்ற பிறகு, மாணவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது மலரும் நினைவுகள் குறித்து மகிழ்ச்சியாக பேசி மகிழ்ந்தனர். பணியிலிருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், தற்போது முன்னாள் மாணவர்கள் சங்கமித்துள்ள இந்த நிகழ்ச்சி பெருமையாக இருந்ததாகவும், வழக்கமாக மாணவர்கள் மட்டுமே ஒன்று கூடும் நிகழ்ச்சியில் ஆசிரியரான தங்களையும் வரவழைத்து பெருமை சேர்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக ஓய்வுபெற்ற ஆசிரியர் துரைராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

முன்னாள் மாணவர்  சிவக்குமார் கூறுகையில், “ஒரே பள்ளியில் படித்து, இன்று பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் நிலையிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற்றதாகவும், இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு சில பணிகளை செய்துள்ளதாகவும், மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களாகிய நாங்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். தற்போது படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்க தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க தொடர்ந்து செயல்படுவோம்” என்றார்.  

 

அரசுப் பள்ளி மாணவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கு மீண்டும் வந்து பள்ளியின் ஆசிரியர்களைக் கௌரவித்த நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதே போல் தமிழகத்தில் மற்ற அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களும் மீண்டும் பள்ளிக்கு வந்து இதுபோன்ற சந்திப்புகளை நடத்தினால், அரசுப் பள்ளியின் தரமும் நன்மதிப்பும் உயரும் என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கூறினார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.