தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இன்று (14/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் 2021- 2022 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 20.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு சுமார் 10 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 15- ஆம் தேதி அன்று முடிவடைவதால், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஆகிய இன்றும், நாளையும் பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் முழு வீச்சில் இயங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.