Skip to main content

கோட்சேவுக்கு சிலை வைக்க பாஜக விரும்புகிறது! - முத்தரசன்

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பரபரப்பு முடியும் முன் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன். கள நிலவரம் குறித்து நம்மிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

 

இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

தமிழகத்தில் நடைபெறும் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு  சென்றேன். அந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளான திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்கள் எப்படி ஏப்ரல் 18 ஆம் தேதி மாற்றத்திற்கான முறையில் வாக்களித்தார்களோ, அதே போல் இந்த இடைத்தேர்தலிலும் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர். அதனால் தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

திமுக வெற்றி பெற்றுவிடும் என்பதால்தான் எதிர்க்கட்சிகளின் மீது ஆளும் கட்சி அவதூறு பரப்புகிறது.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். இந்த சந்திப்பை திமுக தலைமை மரியாதை  நிமித்தமான சந்திப்பு என தெரிவித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறி மோசமான முறையில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார் . ஆனால் மு.க.ஸ்டாலின் பாஜகவுடன் தனது கட்சி பேச்சுவார்த்தை நடத்துவதை உறுதிப்படுத்தினால் அரசியலில் இருந்து விலகத் தயார் என தெரிவித்த பின்பு தமிழிசை தனக்கு வந்த தகவலின் படி கூறியதாகவும், காலம் வரும் போது நிரூபிப்பேன் எனவும் கூறியுள்ளார். இது தரம் தாழ்ந்த அரசியல்.

 

CPI

 

 

நடிகர் கமல்ஹாசன் இந்து மதம் குறித்து பேசியதை பாஜக சர்ச்சையாக்குகிறதா?

நடிகர் கமல்ஹாசன் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே குறித்துதான் பேசினார். காந்தி மதசார்ப்பின்மையை பின்பற்றியதால்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கோட்சேவுக்கு சிலை வைக்க பாஜக விரும்புகிறது. காந்தியின் நினைவு நாளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கோட்சேவை கொண்டாடினர். ஆனால் பிரதமர் அதைத் தடுக்கவில்லை. அதே போல் நாடு முழுவதும் கோட்சே சிலையை வைக்க ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது.

 

ஒட்டப்பிடாரம் பிரச்சாரத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்கு தங்கவிருந்த விடுதியில் சோதனை நடத்தியதை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழகத்தில் ஆளும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி எதிர்க்கட்சிகளின் மீது பொய் குற்றச்சாட்டுகளை வைத்து மக்களிடம் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே நேற்று ஸ்டாலின் தங்க இருந்த விடுதியில் சோதனை நடைபெற்றது. இதற்கு முன் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி இல்லத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்த ரகசிய தகவலின்படி சோதனை நடத்தியதாகக் கூறினர். ஆனால் எத்தனை சோதனை நடைபெற்றாலும் திமுக வெற்றி பெறுவதை ஆளுங்கட்சியால் தடுக்க முடியாது.

 

’ராகுலை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்ததற்காக திமுக வருத்தப்படும்’ என்றார் பாஜக மாநில தலைவர் தமிழிசை. நீங்கள் அதை எப்படி பார்க்கறீர்கள்?

மே 23 ஆம் தேதிக்குப் பிறகு தெரியும் யார் வருத்தப்படப் போகிறார்கள் என்று. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது ஐந்து ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசாமல், காங்கிரஸ் கட்சியின் குடும்பத்தை பற்றி மட்டுமே பேசி வருகிறார். இதனால் தமிழகத்திலும் , மத்தியிலும் கட்டாயம் ஆட்சி மாற்றம் நிகழும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.