Skip to main content

கேள்விக்குள்ளானால் ஜனநாயகத்தின் அடித்தளமே இழந்து விடும்..! -இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

 

 நாட்டின் ஜனநாயக அமைப்பில் நான்காவது நிர்வாகம் தேர்தல் ஆணையம் இது மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற வேண்டியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில குழு இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளது. இக்கடிதத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான முன்னாள் எம்.எல்.ஏ. நா. பெரியசாமி அனுப்பியுள்ளார். 

 

c

 

மேலும் விரிவான அக்கடிதத்தில்    "இந்திய நாட்டின் தேர்தல் ஆணையம் என்பது நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் படி  அதிகாரம் பெற்றுள்ள மிக முக்கியமான அமைப்பாகும். அது நீதித்துறை அடுத்து சட்டமியற்றும் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள்), நிர்வாத்துறையை அடுத்து ஏற்படுத்தப்பட்டுள்ள நான்காவது மிக முக்கியமான ஒரே நிர்வாக அமைப்பாகும். ஆகவே தான் அது நீதி துறையைப் போல் மக்கள் நம்பிக்கையின் ஊற்றாக இயங்க வேண்டியிருக்கிறது.

 

ஆனால் நடைபெற்று வருகிற 17-வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கை கடுமையான நெருக்கடியில் சிக்கியிருப்பது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகள் மீறப்படும் அத்துமீறல்கள் அன்றாடம் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் தனது சார்பற்ற நடுநிலை மற்றும் நியாயமான நடவடிக்கைகளை நிலைநாட்ட விரைந்து செயல்பட வேண்டும் .

 

இதற்கான முறையில் அண்மையில் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 20 வாக்காளர் வாக்களிப்பு சரிபார்க்கும் இயந்திரங்கள் (விவி பாட்) ஆகியவற்றை கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களுக்கு எதற்காக எடுத்துச் செல்லப்பட்டது என்பதற்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. 


கடந்த 07.05.2019 அன்று, பின்னிரவு நேரத்தில் தேர்தல் களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் கவனத்திற்கு தெரிவிக்காமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயலாகும். இது ஆழ்ந்த சந்தேகத்தை உருவாக்கும் வலுவான காரணமாகியுள்ளது. 


ஈ வி எம் மற்றும் விவிபாட் தொடர்பான விதித்தொகுப்பு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட ஆவணம் எண் 2, நான்காம் பதிப்பு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்காமல் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இடமாறுதல் செய்யக்கூடாது என தெளிவாக கூறுகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கருவிகளை இடம் மாற்றியது தொடர்பாக நம்பிக்கை அளிக்கும் விளக்கம் ஏதும் தரவில்லை. இது சந்தேகம் மற்றும் யூக வாதங்களை அதிகப்படுத்தியுள்ளது. 


இந்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் அலுவலர் ஊடகங்களில் பேசிய போது சில வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தும் போது பயன்படுத்த, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இடமாற்றம் செய்யப்பட்டது என்று கூறினார். இது எந்தெந்த வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு? எங்கெங்கு மறுவாக்குப் பதிவுக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன? யார்,யார் கொடுத்த புகார்கள் மற்றும் வேண்டுகோள் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன. 


சட்டவிதிகளுக்கு மாறாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு எமது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறோம். எந்தக் கட்டாயச் சூழல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இடமாற்றம் செய்வதை நிர்பந்தித்தது என்பதற்கு தேர்தல் ஆணையம் ஏற்கத்தக்க வகையில் விளக்கம் அளிக்க வேண்டும்.அதே போல் தமிழ்நாடு தேர்தல் அலுவலர் கூறிய மறுவாக்குப்பதிவு குறித்த நடைமுறைகளையும் விளக்க வேண்டும். 


மேற்குறிப்பிட்ட சம்பவம் எழுப்பியுள்ள கேள்விகள் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின்  நம்பிக்கை கேள்விக்கு ஆளானால், அது ஜனநாயகத்தின் அடித்தளத்தை இழந்து விடும். 


இந்தியத் தேர்தல் ஆணையம் தனது மாண்புகளையும், மக்களின் நம்பிக்கைகளையும் காப்பாற்றும் என உறுதியாக நம்புகிறோம்.  இது தொடர்பான நடவடிக்கை விபரங்களை தெரிவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார். இதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என்ன பதில் தரப் போகிறது?

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cpi National Secretary D. Raja has severely criticized the BJP

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது.  சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.  தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை  விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா?  மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு  வளர்ச்சி இல்லை.  மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது.  மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு  அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட  ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல,  தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல்.  இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.  ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று  போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.