Skip to main content

மாணவர்கள் இல்லாத பள்ளி; ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட வினோதம்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

covai thondamuthur nearest primary school teacher counciling issue

 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் தாணிக்கண்டி என்ற பகுதியில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் யாரும் சேரவில்லை. இதன் காரணமாக பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஆகிய இருவரும் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில் சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான  கலந்தாய்வு நடைபெற்றது. அதில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி நடந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில், தாணிக்கண்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியை ஒருவர் இந்த பணியிடத்தை தேர்வு செய்தார். அதே போல் கடந்த 30 ஆம் தேதி நடந்த இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வில் உதவி ஆசிரியை ஒருவரும் இந்த பணியிடத்தை தேர்வு செய்தார்.

 

இப்பள்ளியில் ஒரு மாணவர்கள் கூட இல்லாத நிலையில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தாணிக்கண்டி பள்ளியைத் தேர்வு செய்த ஆசிரியர்கள் இருவரும் ஏற்கனவே ஒரே பள்ளியில் பணியாற்றியவர்கள் ஆவர். தற்போது இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பணியிட மாறுதலானது இவர்களின் வீட்டிற்கு அருகில் இருப்பதாகவும்  இந்த பணியிட மாறுதல் குறித்து ஆசிரியர்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

 

இந்த பணியிட மாறுதல் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், "சம்பந்தப்பட்ட தொடக்கப் பள்ளியை மூட தற்போது வரை எந்த உத்தரவும் வரவில்லை. எனவே இடமாறுதல் கலந்தாய்வின் போது பள்ளியில் உள்ள பணியிடம் காண்பிக்கப்பட்டது. இந்த ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பட்சத்தில்  இப்பள்ளியைத் தேர்வு செய்தவர்களுக்கு வேறு பள்ளிக்கு மாற்றுப் பணியிடம் வழங்கப்படும்" எனக் கூறினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் இன்று பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
PM Modi's 'Road Show' in Coimbatore today

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி இன்று (18-03-24) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக ஏற்கனவே, கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். ஏற்கனவே கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதையும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதையும் மேற்கோள்காட்டி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘பாதுகாப்பு காரணங்கள், பொது நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தான் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரோடு ஷோ மூலம் பாதிப்பு ஏதும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், “இதுபோன்று அனுமதி கேட்கும் எந்த கட்சிக்கும், அமைப்புக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன்  4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டு இது தொடர்பான விரிவான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று (18-03-24) தமிழகம் வரவிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, கர்நாடகா மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5:30 மணிக்கு கோவை வருகிறார்.

அதன் பின்னர், அங்கிருந்து கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நடக்கும் சாய்பாபா காலனிக்கு செல்கிறார். கோவை - மேட்டுபாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே, மாலை 5:45 மணியளவில் ரோடு ஷோவை தொடங்கும் பிரதமர் மோடி, ஆர்.எஸ். புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்கிறார். பிரதமர் மோடியின் வருகையொட்டி, கோவையில் 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Important announcement For candidates of secondary teaching posts

அரசுப் பள்ளிகளில் 1768 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்த நிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. 

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கடைசியாக உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அவர்களின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் அதில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.

திருத்தம் மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். திருத்தம் செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.

விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர் தேர்வுக்கான முழு கட்டணத்தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.