The court sentenced the person who cheated on the young girl

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ளது திருக்கனூர். இந்த ஊரைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ராஜீவ்காந்தி. இவர், ஆடுமேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர், கடந்த 2012ஆம் ஆண்டு அவரது ஊருக்கு அருகில் உள்ள புதுக்குப்பம் பகுதிக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, இவரைப் போலவே புது குப்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்கு வந்துள்ளார். இருவரும் தினசரி ஆடுகள் மேய்ப்பதற்காகக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.இதன், காரணமாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், அந்த இளம் பெண்ணைத்திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய ராஜீவ் காந்தி, தனிமையில் ஆடு மேய்க்கும் காட்டுப் பகுதியில் அவருடன் நெருங்கிப் பழகி தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால், அந்தப் பெண் கருத்தரித்துள்ளார். அந்தப்பெண்ணுக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இதையடுத்து அந்த இளம் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் ராஜீவ் காந்தியை சந்தித்துத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ராஜீவ் காந்தி, அந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்துள்ளார்.

Advertisment

ஊர்மக்கள், அந்த இளம்பெண்ணின் உறவினர்கள் எல்லாம் சென்று ராஜீவ் காந்தியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பேசியுள்ளனர். அவர் அப்போதும் மறுத்துள்ளார். அதனால் அந்த இளம் பெண், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ராஜீவ் காந்தி மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், ராஜீவ்காந்தி மீது வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சாந்தி, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், ராஜீவ் காந்திக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அந்த மூன்று லட்சம் அபராதத் தொகையைப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குவழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அபராதத் தொகையைக் கட்ட தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில், திறமையாக வாதாடியுள்ளார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராஜீவ்காந்தியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளனர்.