Skip to main content

சென்னை தீவுத்திடலில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Corporation Commissioner inspection in Chennai Island!

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதே சமயம் கோயம்பேட்டில் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, விஜயகாந்தின் உடல் இடமாற்றம் செய்வது குறித்து குடும்பத்தினர் முடிவு செய்வர் எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாகச் சென்னை தீவுத் திடலில் அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

நாளை (29.12.2023) அதிகாலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் மாற்றப்படும் என தேமுதிக சார்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நாளை (29.12.2023) அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள சென்னை தீவுத் திடலில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீவுத்திடலில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

”அந்தப் பழக்கம் எனக்கு சின்ன வயசில் இருந்தே இருக்கு!” - விஜய பிரபாகரன்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Vijaya Prabhakaran says How can you say no when people give you something?

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரை பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  விஜய பிரபாகரன் அளித்த பேட்டி பின்வருமாறு...

திமுகவுக்கும், பா.ஜ.க.வுக்கும் தான் போட்டி, அ.தி.மு.க களத்திலேயே இல்லை என்று சொல்கிறார்களே?

“அவர்கள் களத்தில் இறங்கி பார்த்தால், பா.ஜ.க.வே இல்லை என்று அவர்களே சொல்வார்கள். எங்கேயோ இருந்துகொண்டு பேசக்கூடாது. களத்தில் இறங்கி பார்த்தால் எந்தக் கட்சி இருக்கு என்று தெரியும். அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க கொடி இல்லாத கிராமமே இல்லை. ஒரு பா.ஜ.க. கொடி எங்கேயுமே பார்க்க முடியவில்லை”

ராஜேந்திர பாலாஜி, அவர் போட்டியிடும் போது கூட இப்படி வேலை பார்க்கவில்லை. ஆனால், விஜயகாந்த் பையனுக்காக இந்த அளவுக்கு வேலை செய்கிறார் என்று சொல்கிறார்களே. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

“முதன் முதலில், எனது அம்மா, தம்பியை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன் என்று ராஜேந்திர பாலாஜியிடம் கூறினார். அந்த நாளில் இருந்து ராஜேந்திர பாலாஜி, என்னை ஒரு சகோதரனாகத்தான் பார்க்கிறார். விஜயகாந்த் இல்லாத அந்த நேரம் அவருக்கு அந்த வலி, தாக்கம் இருந்தது. அதனால், என்னை அவருடைய சகோதரர் மாதிரி என் கையைப் பிடித்து கொண்டு கூடவே அனைத்து இடங்களுக்கும் வழிகாட்டி கொண்டிருக்கிறார்”.

இங்கு இருக்ககூடிய  இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருகிறார். அதே போல், பா.ஜ.க கூட்டணி வேட்பாளருக்கு பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு வருகிறார். இதற்கிடையே, பிரதமர் யாரென்றே தெரியாத அதிமுக கூட்டணி என்று சொல்கிறார்களே. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

“2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலுமே அதிமுக வெற்றி பெற்றது. அன்னைக்கு, காங்கிரஸ், பா.ஜ.க என எந்தக் கட்சியுமே பா.ஜ.க கூட்டணியில் இல்லை. அப்போது மக்கள் முழு ஆதரவு கொடுத்தது அதிமுக கட்சிக்குத்தான். அதனால், அந்த விமர்சனம் தமிழ்நாட்டுக்கு எடுபடாது. இங்கு இருக்கக்கூடிய திராவிட கட்சிகள், உள்ளூர் கட்சிகள் என எந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்கிறார்களோ அந்தக் கட்சிதான் வெற்றி பெறும். பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய தேர்தலுக்கு பிறகு எம்.பி.க்களுடைய ஆதரவு வேண்டுமா? இல்லையா பிறகு பார்க்கலாம் . இந்தத் தேர்தலை பொறுத்த வரைக்கும், திமுக கூட்டணி வெற்றி பெறுமா? அல்லது அதிமுக கூட்டணி வெற்றி பெறுமா? என்று பார்க்க வேண்டும்”.

உங்களுக்கு எதிராக நிற்கும், மாணிக்கம் தாக்கூரும் சரி, ராதிகா சரத்குமாரும் சரி தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியில் தங்கி இருந்துகொண்டே நல்லது செய்வோம். ஆனால், மற்றவர்கள் இருப்பார்களா? என்று சொல்கிறார்களே?

“மாணிக்கம்தாக்கூர், இந்தத் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், அவர் இந்த மண்ணின் மைந்தன் இல்லை. அதே போல், ராதிகா சரத்குமாரும் கூட இந்த மண்ணை சேர்ந்தவர் இல்லை. ஆனால், எனது பூர்வீக ஊர் அருப்புக்கோட்டைதான். அங்கு எங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கு. அந்த நிலத்துக்கு பட்டா வைத்திருக்கிறோம். அதனால், என்னை பார்த்து சொல்ல அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை”.

Vijaya Prabhakaran says How can you say no when people give you something?

விருதுநகர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனை குடிநீர் பிரச்சனை தான். உங்களுடைய வாக்குறுதியில் குடிநீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?

“குடிநீர் பிரச்சனை அனைத்து இடங்களிலுமே இருக்கிறது. ஒரு அதிகாரத்திற்கு வந்த பிறகு, மக்களுடைய அனைத்து பிரச்சனைகளுக்குமே தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறேன்”.  

எம்.ஜி.ஆர் மக்களை நேசித்தார். மக்களும் எம்.ஜி.ஆரை நேசித்தார்கள். அதே போல் தான் விஜயகாந்தும். நீங்கள் எந்த மாதிரி ஈடுபாட்டுடன் உள்ளே சென்று வருகிறீர்கள்?

“எம்.ஜி.ஆரின் வழியில் வந்தவர்தான் விஜயகாந்த். அதே போல், அவரது வழியில் வந்தவர்கள் நாங்கள். எனது அப்பா, வீட்டில் இருக்கும் போது எம்.ஜி.ஆரின் படங்களைத்தான் பார்ப்பார். எம்.ஜி.ஆர் பாடல்களைத்தான் கேட்பார். நான் சின்ன வயசாக இருக்கும்போது, என் அப்பா, எனது கைகளில் இருந்து மக்களுக்கு சாப்பாடு கொடுத்து பழக்குவார். ஏனென்றால், அவர் இல்லாத நேரத்தில் அவரது கொள்கைகளை நாங்கள் எடுத்து மக்களுக்கு கொடுத்து பழக வேண்டும் என்று சொல்வார். அதனால், இந்தப் பழக்கம் எனது சின்ன வயசில் இருந்தே வந்துவிட்டது.

நான் கிராமப்புறங்களில் செல்லும்போது, அவர்கள் அனைவரும் என்னை அரவணைக்கும் போது எனக்கு மிகவும் ஆசையாக இருக்கு. சின்ன வயசில் இருந்தே அப்பாவுடன் மக்களை சந்தித்ததனால், மக்களை சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை”.

அனுதாப ஓட்டு தேடுகிறார் என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

“அனுதாபம் இருக்கு. மக்கள் கொடுக்கிறார்கள். ஒருத்தர் மேல் அனுதாபம் வருவது நல்லது தானே. விஜயகாந்த் மக்களுக்கு அவ்வளவு செய்திருக்கிறார். மக்கள் விஜயகாந்தை மிஸ் பண்றாங்க. அதனால், மக்கள் ஒன்னு கொடுக்கும்போது கொடுக்காதீங்க எப்படி சொல்ல முடியும்?. அனுதாபப்பட்டு ஓட்டு போடுங்க என்று நாங்கள் கேட்கவில்லை. விஜயகாந்த் மறைந்த சோகம் மக்கள் மனசில இருக்கு. அனுதாப்படுகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அவர் வாழ்ந்திருக்கிறார். அப்படி வாழ முடியாதவர்கள் இது போன்ற விமர்சனத்தை வைக்கிறார்கள்”.

இந்தத் தேர்தலில் நீங்கள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை என்ன?

“நான் பெருசா எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், கடந்த தேர்தலை போல் ஒன்றரை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மக்கள் சொல்கிறார்கள். நான் எனது வேலையைச் சரியாக செய்கிறேன். மக்களுக்கு தேவையானதை பிரச்சாரம் செய்கிறேன். ஒரு நாளைக்கு 50 கிராமங்களுக்கு செல்கிறேன். ஜூன் 4 ஆம் தேதி மக்களுடைய தீர்ப்பை எனக்கு சொல்வார்கள்” என்று கூறினார்.

Next Story

திமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் பறக்கும் படை சோதனை

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
DMK union secretary's house raided by flying soldiers

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தேர்தல் நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு தேர்தல் பணியாற்றி வரும் திமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உசுப்பூர் ஊராட்சியில் ராஜேந்திரன் கார்டன் பகுதியில் திமுக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சங்கர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திருமாவளவன் செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிக்கையை இவருடைய ஒன்றியப் பகுதியில்தான் வெளியிட்டார்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை அண்ணாமலை நகர் பகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் காரில் பணம் வைத்துக் கொண்டு விநியோகப்பதாக தகவல் வந்துள்ளது எனவும், சங்கரிடம் காரை சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். நடத்தப்பட்ட சோதனையில் ஒன்றும் இல்லை என தகவல் அதிகாரிகள் அவர்களின் உயர் அதிகாரிக்கு தெரிவித்துள்ளனர்.

nn

பின்னர் வீட்டில் ரூ.6 கோடி பணம் உள்ளது என புகார் வந்துள்ளதாக தேர்தல் பறக்கும் படையினர் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். இதனையறிந்த திமுகவினர் அவரது வீட்டிற்கு எதிரே ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.