/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/c3333_0.jpg)
தமிழ்நாட்டில் வாடகைதாரர்களிடம் இருந்து, மூன்று மாத காலத்திற்கு வாடகைக் கட்டணத்தை, வீட்டின் உரிமையாளர்கள் வசூலிக்கக் கூடாதென, அரசாணை பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள், கடந்த மார்ச் 24- ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்தது. இதுநாள்வரை, அந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்கிறது.
கரோனா ஊரடங்கு காலத்தைக் கருத்தில் கொண்டு, குடியிருப்புவாசிகளிடம் இருந்து, நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள், ஒரு மாதத்திற்கு வாடகைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று, மார்ச் 29- ஆம் தேதி, மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவைப் பின்பற்றி, தமிழக அரசும், பேரிடர் மேலாண்மை சட்டம், அவசர கால, பெருந்தொற்று நோய்த் தடுப்பு அவசரகால சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டது.
இதுபற்றி, பொதுமக்கள் அறியும் வண்ணம் விரிவாக எடுத்துச் சொல்லவில்லை. இந்த அரசாணை வெளியிட்ட சமயத்தில், 15 நாட்கள் வரைதான் ஊரடங்கு அமலில் இருந்தது. இப்போது, ஊரடங்கு காலம் 60 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஆகவே, மூன்று மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீடு, நில உரிமையாளர்களுக்கு உத்தரவிடக்கோரி, தமிழக அரசுக்கு மே 12- ஆம் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை அதன் மீது, அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள், ஒரு மாத வாடகையைக் கூட வசூல் செய்துள்ளனர். வாடகை செலுத்தாதவர்கள் காலி செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொற்று காலத்தில், இதுபோன்ற நடவடிக்கைகள் நோய்த் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். கரோனா நெருக்கடி காலத்தைக் கருத்தில் கொண்டு, நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் 3 மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்று மராட்டிய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வாடகைதாரர்களிடம் வாடகைக் கேட்டு வற்புறுத்தினாலோ, அல்லது, வாடகைக் கட்டணம் வசூலித்தாலோ, காலி செய்தாலோ, வீட்டின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடாக அரசு அறிவித்துள்ளது.
கரோனா நெருக்கடி காலத்தில் எடுக்கப்படும் தற்காலிக, அவசர கால நடவடிக்கைகள் தொடர்பாக, சிங்கப்பூர் அரசு கொண்டு வந்த சட்டத்தை மேற்கோள் காட்டி, ஆறு மாத காலத்திற்கு வாடகை வசூல் செய்வதில் இருந்து, வாடகைதாரர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.டெல்லி அரசைப் பொறுத்தமட்டில், 2005- ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி, வீட்டின் உரிமையாளர்களுக்கான வாடகைக் கட்டணத்தை, மாநில அரசே செலுத்தும் என்று அறிவித்துள்ளது. வாடகை கேட்டு குடியிருப்புவாசிகளைத் துன்புறுத்த வேண்டாம்; அந்தக் கட்டணத்தை அரசே ஈடு செய்யும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
வாடகைதாரர்களிடம் இருந்து வாடகை வசூல் செய்ய வேண்டாம் என்ற மத்திய அரசின் உத்தரவை, பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றி அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசும், ஒரு மாதம் வாடகை வசூல் செய்யக்கூடாது என்று அரசாணை வெளியிட்டது. இந்த உத்தரவுகள் அனைத்தும் பேப்பர் அளவில்தான் உள்ளது. இதனால், வாடகை தாரர்களுக்கு எந்தப் பலனும் இல்லை.ஊரடங்கால், பொது மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொழில், வேலைவாய்ப்பு இல்லாததால் கடந்த இரண்டு மாத காலத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வாடகைக்குக் குடியிருக்கும் மக்களால், மாதாந்திர வாடகையைச் செலுத்த முடியவில்லை.
ஆகவே, பெருந்தொற்று காலத்தில் வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற மத்திய அரசு மற்றும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விவரத்தை, வருவாய் மற்றும் காவல்துறை மூலமாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விளம்பரம் செய்ய உத்தரவிட வேண்டும். இரண்டு மாதத்திற்கும் மேலாக அமலில் இருந்து வரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாடகைதாரர்களிடம் இருந்து, மூன்று மாத காலத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்று அனைத்து நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01.gif)