Corona outbreak in Salem

சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு கடந்த 60 நாள்களில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

சேலம் மாவட்டத்தில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (ஆக. 10) சேலம் மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த முதியவர்கள் உள்பட 3 பேர் ஒரே நாளில் அடுத்தடுத்து பலியாயினர்.

Advertisment

இவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த 65 வயதான முதியவர். அவர் கரோனா தொற்று மட்டுமின்றி மூச்சுத்திணறலாலும் பாதிக்கப்பட்டிருந்தார். மற்றொருவர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரத்தைசேர்ந்த 61 வயது முதியவர். இன்னொருவர், சேலம் லைன்மேடு பகுதியைச் சேர்ந்தவர்.

கரோனாவால் பலியான மூவரின் சடலங்களும் சீலநாயக்கன்பட்டி மயானத்தில் பாதுகாப்பாக எரியூட்டப்பட்டது. உயிரிழந்தவர்கள் வசித்து வந்த பகுதிகளிலும் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. தெருக்களில் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது. கிருமி நாசினி மருந்தும் தெளிக்கப்பட்டது.

Advertisment

கரோனா நோய்த்தொற்றால் இறந்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவர்களுடன் சேர்த்து கடந்த இரண்டு மாதத்தில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 77 பேர் கரோனா நோய்த்தொற்றால் பலியாகி உள்ளனர். இம்மாவட்டத்தில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு கடந்த ஜூன் 13ம் தேதி நடந்தது.

அதே நேரம், சேலம் மாவட்ட நிர்வாகம் ஆகஸ்ட் 11ம் தேதி அளித்துள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, இதுவரை 58 பேர் மட்டுமே கரோனாவால் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போதுவரை மாவட்டம் முழுவதும் 4,571 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 330 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது சேலம் அரசு மருத்துவமனையில்1,254 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 1,16,437 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.