உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளன. ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் அறிவிக்கப்படுள்ளது. அதேசமயம்,
தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வின் மூலம் சிறு சிறு கடைகள், நடைபாதை கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் புழங்க தொடங்கியுள்ளனர். அதிகமான மக்கள் நடமாட்டத்தால் கரோனா பரவலாகிவிடுமோ என மக்கள் அச்சப்படுகின்றனர்.
இந்நிலையில் நாளை முதல் மதுபானக்கடை திறக்கப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 9 மதுக்கடைகள் தவிர 134 மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அதேசமயம் 40 நாட்களாக மூடியிருந்த மதுக்கடைகள் திறப்பதால் குடிமகன்கள் அதிக எண்ணிக்கையில் கூட வாய்ப்பு உள்ளதால், மதுக்கடைகளில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் விருத்தாச்சலம் சூரியகாந்தி ஆலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அனைத்து மது பாட்டில்களும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ‘மூடிய மதுக்கடைகளை திறக்காதே! டாஸ்மாக்கை மூடு” என மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் விருத்தாசலம் பகுதியில் உள்ள மதுக்கடைகள் முன்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் மதுக்கடை திறப்பது ஆபத்தானது. மாவட்டத்தில் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் என பலரும் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இருந்தாலும் கூட தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையில் இருந்தனர். மேலும் குடி நோயாளிகள் கடந்த 40 நாட்களாக மது பழக்கம் மறந்து ஒவ்வொரு குடும்பமும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மதுபானக்கடை திறக்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டால் தொற்று பரவுவதற்கு பெறும் வாய்ப்பு ஏற்படும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், விபத்துகள், குடும்ப பிரச்சனைகள் உள்ளிட்டவைகள் அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஊரடங்கு காலத்தில் இளைஞர்கள் வெளியில் சுற்றுவதால் நோய் தொற்றுக்கு ஆளாக நேரும் எனவும், வழக்குகளில் சிக்க நேரிடும் எனவும் அடிக்கடி கூறி எச்சரிக்கை விடுத்து வந்தார். ஆனால் தற்போது மதுபானக் கடை மீண்டும் திறக்கப்பட்டால் இளைஞர்கள் கட்டுக்கடங்காமல் திரிவார்கள். அவர்களின் எதிர்கால சீரழிவிற்கு தமிழக அரசே வழிவகுப்பது போல் ஆகாதா…? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேபோல், “ஊரடங்கு காலத்தில் எவ்வளவோ குடும்ப கஷ்டம் இருந்தாலும் கணவன்மார்கள் குடிக்காமல் குடும்பத்தினரோடு, பிள்ளைகளோடு இருப்பதை சாப்பிட்டு நிம்மதியாக இருந்தோம் மதுக்கடை திறப்பதால் மீண்டும் குடித்துவிட்டு குடும்ப நிம்மதியை குலைப்பார்களோ என அச்சமாக இருக்கிறது” என வேதனைப்படுகின்றனர் குடும்ப பெண்கள்.
ஒன்றரை மாதங்களாக குடியை மறந்திருக்கும், குடி நோயர்களின் குடும்ப நிம்மதிக்கு வேட்டு வைக்கும் அரசின் முடிவை அனைத்து தரப்பினரும் எதிர்க்கின்றனர். குடியால் கிடைக்கும் வருவாயை விட குடும்ப நிம்மதி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விபத்துகள் ஏற்படாமல் பாதுகாப்பதே நல்ல ஆட்சிக்கு அடையாளம்.