நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தி வரும் நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். தி.மு.க-வி.சி.க கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவு மற்றும் ஒப்பந்தம் கையெழுத்து தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
வி.சி.க மட்டுமல்லாது ம.தி.மு.கவுடனும் இன்று தொகுதிப் பங்கீடு கையொப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிபிஎம் மற்றும் கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இதுவரை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வி.சி.க ஒரு பொது தொகுதி உட்பட 3 தொகுதிகளை கேட்டிருந்தது. திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று இறுதி முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.