மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டெல்லியில் காந்தியின் நினைவிடம் உள்ள ராஜ்காட் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. 'சங்கல்ப் சத்தியாகிரக' என்ற பெயரில் போராட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டு இருந்தது. தற்போதைய காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி என மூத்த தலைவர்கள் பலரும், தொண்டர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகலந்துகொண்டுள்ளனர்.
அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை சென்னை வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அசோக் பில்லர் ஆகிய நான்கு இடங்களில் சென்னை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.