மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்திக்கு கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, கோவையில் திறந்தவெளி வாகனத்தில் தனது மூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது காளப்பட்டி சந்திப்பு என்ற இடத்தில் பேசிய ராகுல் காந்தி, "தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. பிரதமர் மோடி தமிழ் மொழி, தமிழக கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளார். தமிழ் மொழி, தமிழக கலாச்சாரத்தை இரண்டாம் நிலையாக பிரதமர் மோடி கருதுகிறார். ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்டு வருவதை ஏற்க முடியாது. வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் உரிமையை பிரதமர் மோடி பறிக்கிறார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.