Skip to main content

'என்று முடியுமோ இந்த கண்ணீர்க் கதைகள்!'- ஜோதிமணி எம்.பி. ட்வீட்!

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

DELHI FARMERS CONGRESS LEADER AND MP JOTHIMANI TWEET

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து 131வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இதுவரை 250- க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிர்நீத்த விவசாயிகளின் நினைவாக ஷாஜஹான்பூரில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. 

 

இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி ஷாஜஹான்பூர் எல்லையில், மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவுச் சின்னம்!... எத்தனை உயிர்கள்! எத்தனை துயரம்! என்று முடியுமோ இந்த கண்ணீர்க் கதைகள்! இந்தியா முழுவதிலும் இருந்து ஒருபிடி மண் கொண்டுவரப்பட்டு இந்த துயரார்ந்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.