
தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த நவம்பர் மாதம் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை கணக்கெடுத்து, மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 500, நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம், நீண்டகாலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22 ஆயிரத்து 500 நிவாரணம் என்ற அடிப்படையில் விரைந்து நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டார். இதனையடுத்து, ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டது.
அதன்படி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், செங்கல்பட்டு, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், இராணிப்பேட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 3.23 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 783 விவசாயிகள் பயனடையும் வகையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்குத் தமிழக அரசு நிவராணத் தொகை அறிவித்தது வரவேற்கத்தக்கது. மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 783 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 498.80 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாகத் தமிழக அரசு அறிவித்து ஓரிரு நாளில் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நோடியாக செலுத்தப்படும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாய பெருமக்களின் வயிற்றில் பால்வார்க்கும் ஒரு செய்தி.

தொடர்ந்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் தேமுதிக சார்பாக விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் நேரடியாகச் சென்று பார்வையிட்டு தமிழக அரசிடம் நிவாரணத் தொகையை கட்டாயம் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறோம். அந்த வகையில் தமிழக அரசு இன்றைக்கு நமது கோரிக்கைக்குச் செவி சாய்த்து ஓட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க இருப்பது பெரும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.
எனவே அந்த நிவாரண தொகையைக் காலதாமதம் இல்லாமல் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தி விவசாயிகளின் துயர் துடைத்துப் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்குப் பாதுகாப்பாகவும், பக்கபலமாகவும் தமிழக அரசு இருக்க வேண்டும். எனவே இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி தமிழக அரசிற்கு தேமுதிக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.