Skip to main content

கிராம சபை கூட்டத்தில் கைகலப்பு!

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

Conflict in grama saba meeting

 

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி கடலூர் மாவட்டம், அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்லாம்பாக்கம் ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா உலகநாதன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

இதில் ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவி கணவர் வீரமணி உட்பட கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் துணைத் தலைவரின் கணவர் வீரமணி ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் என்பவர் நீங்கள் கணக்கு கேட்க முடியாது தேவையென்றால் ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக உள்ள உங்களது மனைவி வந்து கேட்கட்டும் என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

 

அங்கு கூடியிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் வாக்குவாதம் முற்றி அவர்கள் இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராம சபை கூட்டத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து தீவிர விசாரண நடத்தி உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான்''-முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

"Villages are the first places where democracy blossomed" - M.k.Stalin

 

அக்டோபர்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கிராம சபை கூட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது காணொளி குறும்பட உரையின் மூலம் தொடங்கி வைத்துள்ளார்.

 

தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. பருவமழை முன்னேற்பாடு, டெங்கு தடுப்பு நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு பற்றி இந்த கிராம சபை கூட்டங்களில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

 

 

இதுகுறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையில், ''மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தான் முறையாக தடங்கள் இன்றி கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம். கிராமப்புற மக்களின் குரல் எப்போதும் எந்த சூழலிலும் தடையின்றி ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. உத்திரமேரூர் வட்டாரம்தான் ஜனநாயக தேர்தல் அமைப்புமுறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடந்ததை உத்திரமேரூர் கல்வெட்டு தான் கூறுகிறது.

 

யாரெல்லாம் தேர்தலில் போட்டியிடுகிறார்களோ அவர்களின் எல்லோருடைய பெயர்களையும் ஓலைச்சுவடியில் எழுதி குடத்தில் போடுவார்கள். அந்த குடத்தை குலுக்கி ஒரு ஓலையே எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட ஓலையில் யாருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். இதுதான் குடவோலை முறை. இப்படித்தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி என்ற அமைப்பே மலர்ந்தது. அந்த வகையில் பார்த்தால் கிராமங்களில் தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றி இருக்கிறது. அதிலும் குறிப்பாக கிராம சபை என்ற அமைப்பு தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் சோழர்காலம் தொட்டே புழக்கத்தில் இருந்து வருகிறது.

 

சோழப் பேரரசில் ஊர் மற்றும் மகாசபை என்ற இரு வேறு அவைகள் இருந்தது. இதில் மகாசபையை போன்றது தான் தற்போதைய கிராம சபை என்று அறிய முடிகிறது. மக்களாட்சியுடைய ஆணிவேராக இருக்கக்கூடிய கிராம சபை கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து தங்களுடைய தேவைகளையும் பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும், வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டுவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இந்திய அளவில் நாடாளுமன்றம், மாநில அளவில் சட்டமன்றம் இருப்பது போல கிராம அளவில் கிராம சபையானது மக்கள் குரலை எதிரொலிக்கும் மன்றமாக அமைந்திருக்கிறது.

 

கிராம சபைகள் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெற வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 குறிப்பிட்டிருந்தாலும் அதை ஆண்டுக்கு நான்கு முறை என்று கலைஞர் மாற்றினார். தற்போதைய திராவிட மாடல் அரசனது இதை ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று அதிகரித்திருக்கிறோம். அதன்படி ஆண்டொன்றுக்கு முறையே குடியரசு நாள், உலக தண்ணீர் நாள், தொழிலாளர் நாள், விடுதலை நாள், காந்தியடிகள் பிறந்தநாள், உள்ளாட்சி நாள் ஆகிய ஆறு நாட்களில் கிராம சபை நடைபெற்று வருகிறது'' என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Next Story

கிராம சபைக் கூட்டம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை

Published on 30/09/2023 | Edited on 01/10/2023

 

Village council meeting C M M.K.Stal's speech

 

தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தி (02.10.2023) அன்று 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.

 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மக்களதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபைக் கூட்டங்கள் என்பதை 6 ஆக உயர்த்தி அரசாணையிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் நாளில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராம சபைக் கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு ஊரக வாழ் பொதுமக்களுக்கு இல்லம் தோறும் வழங்கப்பட்டுள்ளது.

 

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் என்கிற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கிணங்கவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணப்படி அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புள்ள மக்கள் நலனை மையமாகக் கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தினை நோக்கிய இந்த கிராம சபையின் கருப்பொருளாக எல்லார்க்கும் எல்லாம் என்கிற மையக் கருத்தின்படி நடத்தப்படவுள்ளது.

 

Village council meeting C M M.K.Stal's speech
கோப்புப்படம்

இவ்வழைப்பிதழ் கிராம சபைக் கூட்டத்திற்கான கருப்பொருளான எல்லார்க்கும் எல்லாம் எனும் மையக் கருத்துடன் அரசு செயல்படுத்தும் அனைத்து முன்மாதிரி திட்டங்கள் மூலம் பயன் பெற்றோர் விவரம், கிராம ஊராட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்கள், ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் மற்றும் அதனால் பயன்பெறும் பயனாளிகள் ஆகியன அடங்கிய கையடக்க விழிப்புணர்வு பிரதிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது.

 

அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் முத்தான திட்டங்களான விடியல் பயணம், மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாகத் திட்டச் செயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்து குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Village council meeting C M M.K.Stal's speech
கோப்புப்படம்

 

கிராமசபைக் கூட்டங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி குறும்பட உரையின் மூலம் 02.10.2023 அன்று துவக்கி, கிராமசபை குறித்த கருத்துக்களைத் தெரிவித்திட உள்ளார். மேலும், அமைச்சர்கள் தொடர்புடைய மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கிராமசபைக் கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாகக் கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

இதில், பொதுவான விவாதப் பொருட்களாக, ஊராட்சிகளின் நிதி நிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் இதர பொருட்களுடன் விவாதம் நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.