Skip to main content

மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா...

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

Commendation ceremony for government school students going to medical college ..


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்ட அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கீரமங்கலத்தில் பாராட்டு விழா நடந்தது. அரசுப் பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க தேர்வாகி உள்ள, அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த கீரமங்கலம், மாங்காடு, தாந்தாணி உள்ளிட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘அணவயல் அறம் அறக்கட்டளை’ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 


கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னசாமி தலைமையில், கீரமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரைமாணிக்கம், தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜ், மாரிமுத்து, ஆடிட்டர் வைத்திலிங்கம், செரியலூர் இனாம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜயாவுதீன் ஆகியோர் முன்னிலையில் இவ்விழா நடந்தது. 


அறக்கட்டளைத் தலைவர் கணேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் தினகரன், டாக்டர் சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

 

விழாவில் டாக்டர் சதீஷ் பேசும் போது, “அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு சிறு தடையாக இருக்கும். ஆனால், அது போகப் போகச் சரியாகிவிடும். எந்த நேரத்திலும் உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். தயங்காமல் உதவிகள் கேட்கலாம். உங்களைப் பார்த்து உங்களுக்கு அடுத்து பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் ஆக வேண்டும். அதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்” என்றார்.


மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் தினகரன் பேசும் போது, “ஒரே பகுதியில் இருந்து இத்தனை கிராமப்புற மாணவர்களை உருவாக்கி, மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புகின்ற ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் முதலில் பாராட்டுகிறேன். உங்களுக்கு முதல் ஆண்டில் சில சவால்கள் இருக்கும். அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். கிராமப் புறங்களில் இருந்து அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் நீங்கள், ஒவ்வொருவரும் கிராமப்புறங்களில் சேவைசெய்ய முன்வர வேண்டும். பலர் முதல் மதிப்பெண் எடுத்தவுடன் மருத்துவராகி கிராம மக்களுக்குச் சேவை செய்வேன் என்று பேட்டி கொடுப்பார்கள். ஆனால், அவர்கள் படிப்பு முடிந்தபிறகு கிராமங்கள் வேண்டாம் என்று போய்விடுகிறார்கள். நீங்கள் அப்படி இருக்கக் கூடாது” என்றார்.
 

cnc


அறக்கட்டளைத் தலைவர் கணேசன் பேசும் போது, “புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சாதிக்கும் மாணவர்கள் அதிகம். அதில் யாரும் ஆட்சிப் பணிக்குத் தயாராகவில்லை. அதனால், நீங்கள் மருத்துவம் படித்தாலும் கூட மாவட்டத்தை நிர்வாகம் செய்யும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற இடங்களுக்கு வரவேண்டும்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.