Skip to main content

கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி மாயம்...24 மணி நேரமாக தேடும் பணி தீவிரம்...!

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

போலீசாரின் எச்சரிக்கையை மீறி கடலில் குளிக்க இறங்கிய கல்லூரி மாணவன் கடலில் மூழ்கிய சம்பவம் அரிச்சல்முனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

College student drowns in the sea

 

 

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கர்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலாவிற்காக தமிழகம் வந்துள்ளனர். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்டப் பகுதிகளை பார்வையிட்ட பின்னர் சனிக்கிழமை இரவில் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்து தங்கியுள்ளனர். ஞாயிறன்று காலை 8 மணியளவில் அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற மாணவர்கள் ஆபத்தை உணராமல் கடல் பகுதியில் விளையாடிய நிலையில், அங்கு காவலுக்கு இருந்த போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனினும், போலீசார் அங்கிருந்து சென்றவுடன் மீண்டும் கடலில் இறங்கி விளையாட பரஜ்வால் என்ற மாணவன் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். 
 

College student drowns in the sea

 

இதனையடுத்து அருகிலிருந்த மாணவர்கள் கூக்குரலிட்டதையடுத்து அருகிலிருந்த மீனவர்கள் கடலில் குதித்து மாணவனை தேடியுள்ளனர். அப்பொழுதும் மாணவன் கிடைக்காததால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடந்த 24 மணி நேரமாக மாயமான மாணவனை தேடியும் கிடைக்காததால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தமிழக கடலோர காவல் குழும போலீசார் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர். இதனையடுத்து மாணவருடன் வந்த ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் அழுது புலம்பி வருகின்றனர். இதனால் அரிச்சல்முனை பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மத்தியில் சோகம் நிலவியது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடும்ப உறுப்பினர்கள் கழுத்தறுத்து கொலை; அரியர் வைத்திருந்ததைக் கண்டித்ததால் நிகழ்ந்த கொடூரம்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
 The horrible incident happened because Ariar condemned what he had

சென்னை திருவொற்றியூரில் கல்லூரி படிப்பில் இளைஞர் ஒருவர் அதிகமாக அரியர் வைத்திருந்ததால் தாய் கண்டித்ததில் தாயையும், சகோதரனையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை திருவொற்றியூர் திருநகர் தெருவில் வசித்து வருபவர் பத்மா. இவர் அக்குபஞ்சர் தெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார். பத்மாவின் கணவர் முருகன் கிரேன் ஆப்ரேட்டராக ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். பத்மா, முருகன் தம்பதிக்கு நித்தேஷ் (22), சஞ்சய் (14 ) என்று இரு மகன்கள் உள்ளனர். பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படித்துள்ளார். சஞ்சய் திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று 11 மணியளவில் நித்தேஷ் அவருடைய பெரியம்மா மகள் மகாலட்சுமி என்பவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 'நாங்கள் அனைவரும் வீட்டை விட்டு செல்கிறோம். எங்களுடைய வீட்டு சாவியை ஒரு பையில் போட்டு உங்கள் வீட்டு வாசலில் வைத்திருக்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார். அந்தக் குறுஞ்செய்தியை மகாலட்சுமி பார்க்காமல் விட்டுள்ளார். அடுத்தநாள் காலை எழுந்து செல்போனை பயன்படுத்திய பொழுது நித்தேஷ் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி, உடனடியாக வீட்டு வாசலுக்கு சென்றபோது குறுஞ்செய்தியில் நித்தேஷ் குறிப்பிட்டபடி வெளியே ஒரு பையும், அதில் சாவியும் இருந்தது.

 The horrible incident happened because Ariar condemned what he had

உடனே சாவியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி அக்கம் பக்கத்தினர், உதவியுடன் சென்று உள்ளே பார்த்த பொழுது பிளாஸ்டிக் பை ஒன்றில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் பத்மா மற்றும் இளைய மகன் சஞ்சய் ஆகிய இருவரும் சடலமாக கிடந்தனர். உடனடியாக இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸ் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் டேட்டா சயின்ஸ் படித்த நித்தேஷ் 14 அரியர் வைத்திருந்ததால் தாய் பத்மா அவரை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். அதேபோல் சகோதரன் சஞ்சையும் அரியர் வைத்திருப்பது தொடர்பாக அடிக்கடி சொல்லிக் காட்டியதால் ஆத்திரத்தில் இருந்த நித்தேஷ் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் கொலையை மறைப்பதற்காக இருவரது சடலங்களையும் பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி வீட்டில் வைத்துவிட்டு சாவியை உறவினர் வீட்டின் முன்பு போட்டுவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நித்தேஷை போலீசார் தேடி வந்த நிலையில், நித்தேஷ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றதாகவும் ஆனால் இறுதியில் தற்கொலை செய்ய மனமின்றி சுற்றித்திரிந்த போது கைது செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக நித்தேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

கள்ளக்கடல் எதிரொலி; தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
  Sea rage in Dhanushkodi

கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்த நிலையில் ராமநாதபுரம் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக் கடல் எச்சரிக்கை எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசப்படும், 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும் என்பதால் மக்கள் யாரும் கடல் பகுதிகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நேற்றே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், கடற்கரைப் பகுதிகளில் இறங்கவும் குளிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். நேற்று இரவு முதல் வழக்கத்திற்கு மாறாக காணப்படுகிறது. சூறைக்காற்று வீசுவதால் அந்தப் பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்காமல் கடற்கரை ஓரமாக நின்று பார்த்துவிட்டு செல்கின்றனர்.