Skip to main content

மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பலி!!

Published on 25/01/2019 | Edited on 25/01/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரண்மனைக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் மன்னவன் மகள் கவிதா (21). காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கவிதாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதால் பட்டுக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ரத்த பரிசோதனையில்  அணுக்கள் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் 3 நாட்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

 

death

 

தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்து கவிதா வீட்டிற்கு வந்த உறவினர்கள் கதறி அழுதனர். அதே போல கவிதா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அறிந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் அவரது சக நண்பர்கள், தோழிகள் வந்து கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டுக்கோட்டை கார் விபத்து; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Pattukottai car incident The  toll rises to 5

தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு காரில் 11 பேர் நேற்று (20.01.2024) அதிகாலை சென்று கொண்டிந்துள்ளனர். அப்போது இவர்கள் சென்ற கார் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை  சேதுபாவாசத்திரம் காவல் சரகம் மனோரா அருகே செல்லும்போது சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்து நின்றதால் வேகமாகச் சென்று சிறிய பாலத்தில் மோதியுள்ளது. அதி வேகமாக வந்த கார் பாலத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் அந்த காரில் பயணித்த பாக்கியராஜ் (62), ஞானம்பாள் (60), ராணி (40), சின்னப்பாண்டி (40) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த கார் விபத்தில் மரிய செல்வராஜ் (37), பாத்திமா மேரி (31), சந்தோஷ்செல்வம் (7), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சண்முகத்தாய் (53) ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இந்த சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவித்திருந்தார். அதன்படி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 25 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தனது இரங்கலையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த கணபதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் படுகாயமடைந்த 6 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

ஆணவக் கொலை! - பெண்ணின் தந்தை கைது

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
tanjore girl passes away case father arrested by police

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 

இந்த நிலையில், இவர்களது காதல் ஐஸ்வர்யாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. மேலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையோடு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். 

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.