
புதுக்கோட்டை பேராங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் தனியார் கல்லூரி சார்பில் வைக்கப்பட்ட கல்விக் கடன் விளம்பர பதாகையில் மாவட்ட ஆட்சியர் புகைப்படம் மட்டும் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களும், உளவுத்துறையினரும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளும் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாம் விசாரித்த போது, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் மெர்சி ரம்யா ஐ.ஏ.எஸ். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள் யாரையும் மதிப்பதில்லையாம். அதிலும் அவருக்கு இணையான அதிகாரம் இருக்கும் அதிகாரிகளாக இருந்தாலும் அவர் யாரையும் மதிப்பதில்லையாம். தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்து தான் வசைபாடுவாராம்.

அதேபோல் டி.ஆர்.ஓ. தாசில்தார், கூடுதல் உதவி கலெக்டர் என்று யாரும் அவர் முன்பு அமரக்கூடாதாம். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று விசாரித்தால், மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களையும் கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறாராம். இதெல்லாம் பொறுக்க முடியாமல் தான் அவரை எதுவும் செய்யாமல் அவருடைய புகைப்படம் இருந்த பேனரை கிழித்து பொதுமக்கள் தங்களுடைய ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் விளக்கம் கேட்க நாம் தொடர்பு கொண்ட போது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர் தரப்பு விளக்கம் கொடுத்தால் அதனையும் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்.