
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தன்னை ட்ரான்ஸ்பர் செய்ததை பள்ளி மாணவிக்கு கூறிவிட்டுச் சென்ற செயல் அம்மாவட்ட மக்களை பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் பேச்சித்தா. 16 வயதான இவர், அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும், இவரது வீட்டில் குடிநீர், மின்சாரம் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் லட்சுமி குடும்பத்தினர் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வந்துள்ளனர். அதே சமயம், வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால், மாணவி பேச்சித்தா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் தங்களது துயரங்களை மாணவி பேச்சித்தா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜிற்கு வாட்ஸப்பில் தகவல் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் கொடுத்த கலெக்டர், உடனடியாக மாணவி பேச்சித்தாவின் வீட்டிற்கு அன்றைய தினமே மின்சாரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, மாவட்ட ஆட்சியரின் சுயநிதியின் மூலம் அந்த ஏழை மாணவிக்கு புது வீடும் கட்டி கொடுக்கப்பட உள்ளது.
இத்தகைய சூழலில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த செந்தில் ராஜ், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவி பேச்சித்தாவை நேரில் சந்தித்த கலெக்டர், தான் டிரான்ஸ்பர் செய்யப்பட்டதை கூறி, விடைபெற்றுச் சென்றார். மேலும், அந்த மாணவிக்கு புத்தகத்தில், "அன்புள்ள பேச்சிதா.. உங்களோட வாழ்க்கைல எல்லாமே நல்லதா நடக்கும். ஒழுங்கா படிக்கணும்.. சந்தோஷமா இருக்கனும். உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்" என எழுதிவிட்டுச் சென்றார். அதே சமயம், மாணவியை நேரில் வந்து சந்தித்த கலெக்டரின் செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.