ஐபிஎஸ் சூதாட்டத்தில் பல லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொள்ளாச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சிக்கு அருகே உள்ள சப்பட்டை கிழவன் புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம். 35 வயதான இவர், கார் டீலர் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சபாநாயகம் கடந்த 14 ஆம் தேதியன்று கோவைக்கு தன்னுடைய தொழில் சம்பந்தமாக வந்துள்ளார். அப்போது, தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு காந்திபுரம் செவன்த் எக்ஸ்டென்ஷனில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து, அடுத்த நாள் காலை சபாநாயகத்தின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. அந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை.
அதன்பிறகு சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த அறையின் பாத்ரூமில் சபாநாயகம் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், சபாநாயகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே, சபாநாயகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி போலீசார் சபாநாயகத்தின் இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சபாநாயகம், அதில் சுமார் 90 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார் என்பதும், அதனால் ஏற்பட்ட மன வேதனையில் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த தற்கொலை குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.