Skip to main content

ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியான 37வது நபர்; தமிழகத்தில் தொடரும் அவலம்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

Coimbatore youth lost their life after losing money in online gambling

 

கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் சங்கர்(29). பொறியாளரான இவர் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை விளையாடி வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. முதலில் இந்த விளையாட்டில் சங்கருக்கு வருமானம் கிடைக்கவே, நாளடைவில் அதற்கு அடிமையாகி, தான் சேமித்து வைத்த பணத்தை இழந்துள்ளார். தொடர்ந்து சூதாட்டத்தில் இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என எண்ணிய சங்கர் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த பணம், கடன் வாங்கிய பணம் என சங்கர் அனைத்தையும் இழந்துள்ளார். இதனால் சங்கர் மிகுந்த மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், சங்கர் கடந்த 12 ஆம் தேதி தனது பெற்றோர்களிடம் வேலை தொடர்பாக வெளியூருக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், அவர் சொன்னபடி வெளியூருக்குச் செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். அப்போது சங்கர், தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த அவர்கள் சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

 

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சங்கர் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அதில், ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் பணம் வாங்கியிருந்ததாகவும், தன்னால் அதை திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்றும், அதனால் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. 

 

இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஆன்லைன் விளையாட்டில் தமிழகத்தில் 36 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாக்யராஜால் பதற்றமான கோவை; எஸ்.பி. பரபரப்பு விளக்கம்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
SP has explained Bhagyaraj's allegation that incident  happening  Coimbatore

தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு தனது அனுபவங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி பாக்யராஜ் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று தலைப்பில் பேசி வெளியிட்டிருந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில் பேசும் பாக்கியராஜ், “கோவை  மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஒரு ஆறு உள்ளது. அந்த ஆற்றில் செல்லும் மக்கள் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். தொடக்கத்தில் ஆற்றில் உள்ள சுழலில் மாட்டிக் கொள்வார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. உள்ளூர்க்காரர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு உடலை மீட்டுத் தருவார்.

நாளடைவில் தான் தண்ணீருக்குள் மூச்சைப் பிடிக்கும் தன் திறமையை அவன் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. தண்ணீருக்குள் இறங்குபவர்களை பின்தொடர்ந்து, திடீரென்று காலை பிடித்து இழுத்து பாறைக்குள் சிக்க வைத்துவிடுவார். பிறகு இவரே வெளியில் வந்து அவர்களது உடலை மீட்டுக் கொடுப்பதை தொழிலாக வைத்துள்ளார். இது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்தப் பகுதிக்கு செல்வோர் கவனமாக இருங்கள்..” என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி வெளியிட்டார். 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நடிகர் பாக்கியராஜ் பகிர்ந்த வீடியோ குறித்து அறிக்கை மூலம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்ததுள்ளார். அந்த அறிக்கையில், “பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இது சம்பந்தமான குற்றச் சம்பவம் ஒன்று கூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் உள்ள பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள்  வழியாகச் செல்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி 20 நபர்கள் இறந்துள்ளனர். அடிக்கடி நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் 10  பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு மேட்டுப்பாளையம் லைஃப் கார்ட்ஸ் என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 2023 ஆண்டு ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.  பயிற்சி பெற்ற காவலர்கள் தொடர்ந்து பணியிலிருப்பதால், கடந்த 2023ம் ஆண்டு 914 மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 2022, 2023 பதிவான அனைத்து வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டது'' என அறிக்கையில் பாக்கியராஜ் வீடியோவில் கூறியதை முற்றிலும் மறுத்தார். 

தொடர்ந்து பவானி ஆற்றில் விபத்து நடக்கும் காரணம் பற்றி அறிக்கையில் கூறிய எஸ்பி, “2022, 2023 பதிவான அனைத்து வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டது. அதில் அலட்சியம் அல்லது அதீத நம்பிக்கையே விபத்தில் சிக்கி இறப்பதற்கான காரணம்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து, இதுபோன்று பவானி ஆற்றில் நடக்கும் விபத்துகளைத் தடுக்க, ஆற்றில் 19 ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலமும் அந்தப் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை எனவும் தனது அறிக்கையில் எஸ்.பி. விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

அறிக்கையின் இறுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அம்பாரம்பாளையம் ஆற்றுக்கரையில் கொலைகள் நடைபெறுவதாக பாக்கியராஜ் வெளியிட்ட வீடியோ அடிப்படை ஆதாரமற்றது என்றவர், வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச்செயல் என எச்சரித்துள்ளார். இதையடுத்து, பாக்கியராஜ் வீடியோ குறித்து கருத்து தெரிவித்த அம்பாரம்பாளையம் பகுதி மக்கள், “பவானி, கொடிவேரி ஆறுகள் குறித்து கட்டுக் கதைகள் ஏராளம். மழை பெய்தாலே பில்லூர் அணையிலிருந்து அதிகம் தண்ணீர் வரும், ஆற்றில் ஏற்கனவே ஆங்காங்கே பாறை இடுக்குகள் உள்ளதால் சுழல் ஏற்பட்டு நீச்சல் தெரியாதவர்கள சிக்கிக் கொள்கிறார்கள். ஆற்றின் கரையோரம் இருக்கும் கோவிலில் அவ்வப்போது வேண்டுதல் நிறைவேற  கிடாய் வெட்டுவார்கள். இதில்  நடைபெறும் கறி விருந்துக்கு பின் சிலர் மது போதையோடு ஆற்றுக்குள் இறங்கி அதிகம் சிக்குகிறார்கள். இதில் அதிகம் சிக்குவது ஆற்றின் போக்கு அறியாத வெளியூர் மக்கள் தான். பாக்கியராஜ் சொன்னது அவரின் திரைக்கதைக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஒருவேளை அவருக்கு யாராவது ஆதாரமற்ற தகவலை நம்பும்படி சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால், பிரபலமான ஒருவர் அதனை மக்களிடம் சொல்லும்போது தீர விசாரித்து சொல்லி இருக்க வேண்டும்..'' என கருத்து தெரிவித்தனர். 

திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் அடிப்படையில் ஆதாரமற்ற ஒரு தகவலை பரப்பியுள்ளார் என கோவை எஸ்.பியே மறுப்பு தெரிவித்து எச்சரிக்கை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

நீதித்துறையில் இனி நீங்களே வரலாறு!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
first time in TN, tribal woman Sripathi has been selected as youth judge

வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், தன்னுடைய அடையாளத்தை மாற்றுவதற்கும் படிப்பு மிகவும் அவசியம்; ஆனால் சமீப காலமாக படிப்பு என்பது கட்டாயம் அல்ல; பிள்ளைகளை கட்டாயப் படுத்தி கல்வி கற்க வைக்காதீர்கள் என்று கருத்துகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன. ஆனால் கல்விதான் எல்லாம் என்று படிப்பின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவர்களுக்கு பதிலளித்தும் வந்தார்கள். கல்வி ஒருவரை எங்கிருந்து எங்கோ எடுத்து செல்லும் என்பதற்கு பல பேரை உதாரணங்களாகக் கூறலாம்; அந்தப் பல பேரில் மற்றுமொரு நபராக இணைந்துள்ளார் 23 வயதேயான பழங்குடியினப் பெண் ஸ்ரீபதி.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபதி. ஏழ்மை குடும்ப பின்னணியில் வளர்ந்த ஸ்ரீபதி கல்வியின் முக்கியத்துவம் கருதி வறுமையிலும் போராடிக் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் 1 குழந்தை  உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்தச் சமயம் ஸ்ரீபதி கருவுற்று இருந்தார். எப்படியாவது தேர்வை எழுதிவிட வேண்டும் என்று நினைத்த ஸ்ரீபதிக்கு, தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒரே நாளில் வந்தது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

first time in TN, tribal woman Sripathi has been selected as youth judge

சற்றும் மனம் தளராத ஸ்ரீபதி, தேர்வுக்கு தயாராகி வர, தேர்வுக்கு ஒரு நாள் முன்பே பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. பொதுவாக குழந்தை பிரசவமான பெண்களுக்கு அவரது வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப சில வாரங்களாகும். தன்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி பிரசவமான இரண்டாவது நாளே தன்னுடைய கணவர் உதவியுடன் சென்னைக்கு காரில் வந்து சிவில் நீதிபதி தேர்வை எழுதினார். வலிகளுக்கு இடையே தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். அவர் மட்டுமல்ல அவரது குடும்ப உறவினர்களும் கூட தேர்வின் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

நீண்ட உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கைமேல் பலன் கிடைத்தது போன்று சமீபத்தில் சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. பெரும் பதற்றத்துடன் முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீபதிக்கு தேர்வின் முடிவு சாதகமாக அமைந்தது. டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஸ்ரீபதி வெற்றி பெற்றிருந்தார்.  இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார் மரியாதைக்குரிய நீதிபதி ஸ்ரீபதி....