Skip to main content

நகைகள் கொள்ளைச் சம்பவம்; நூதன முறையில் வலம் வந்த கொள்ளையன் கைது

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
coimbatore Jewelery issue police action

கோவை மாவட்டம் காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி ஏசி வென்டிலேட்டர் வழியே துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், சுமார் 200 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணைக் காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக அந்தக் கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளைத் திருடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் மீது தருமபுரி மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீசார் இவரைத் தேடி வருவதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரது வீட்டிலும், அவரது நண்பர் சுரேஷ் என்பவர் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த கொள்ளையன் விஜயகுமார் வீட்டில் இருந்தும், ஆனைமலையில் உள்ள அவரது நண்பர் சுரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான விஜயகுமாரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் ஐயப்ப பக்தர் போல் வேடம் அணிந்து வலம் வந்த நிலையில், போலீசார் இவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்ட விஜயகுமார் விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.

சார்ந்த செய்திகள்