
சென்னை ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் சென்னை காசிமேட்டில் புயலின் தாக்கம் காரணமாக சேதமடைந்த விசைப்படகுகளைப் பார்வையிட்டார். அதன் பிறகு அங்குள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர், "புயல் பாதிப்பிலிருந்து சென்னை முழுமையாக மீண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திட்டமிட்டு அரசு செயல்பட்டதால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. புயல் பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் தொடர்ந்து கேட்டறிந்தேன். இரவு, பகல் பாராமல் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், மின்சார ஊழியர்கள், அதிகாரிகள், அமைச்சர்களுக்கு பாராட்டுகளுடன் கூடிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
"தமிழகத்தில் 201 நிவாரண முகாம்களில் 9,130 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முழுமையாக சேத விவரங்களைக் கணக்கெடுப்பு செய்த பின் நிவாரணம் அறிவிக்கப்படும். கூடுதலாக பணம் தேவையெனில் மத்திய அரசிடம் நிதி கேட்போம்" என்றார்.