ரபக

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்த காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்த காரணத்தால் கடந்த சில நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. கனமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், சென்னையில்பல இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

Advertisment

இந்நிலையில், நேற்று (11.11.2021) சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் சாய்ந்த மரங்களை உதயகுமார் என்பவர் அப்புறப்படுத்தியிருக்கிறார். அப்போது எதிர்பாராத வகையில் அருகில் இருந்த மரம் ஒன்று அவர் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் டி.பி.சத்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சென்ற அவர், முறிந்து விழுந்திருந்த மரங்களை விரைவாக அப்புறப்படுத்தி, அதனுள் மயங்கிய நிலையில் இருந்த உதயகுமாரை மீட்டு, தன் தோளில் சுமந்துவந்து ஓர் ஆட்டோவில் ஏற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உதயகுமார் தற்போது நலமடைந்துள்ளார். இந்நிலையில், துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை முதல்வர் அழைத்துபாராட்டியுள்ளார். ராஜேஸ்வரியை அனைவரும் பாராட்டிவரும் நிலையில், நேற்று முழுவதும் ட்விட்டர் ரெண்டிங்கில் அவர் பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment