CM MK Stalin Tribute to Ex minister passed away

தி.மு.க.வின் ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான க. சுந்தரம் நேற்று (18.09.2024) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தி.மு.க.வின் ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சு. சுந்தரம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். க.சுந்தரம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

Advertisment

கலைஞரின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றியவர். தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த க. சுந்தரம், திமுக அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தீரமிகு செயல்வீரர். கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த காட்சிகள் இப்போதும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.

Advertisment

கடந்த ஆண்டு வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் க.சுந்தரத்திற்குக் கட்சிப் பணிகளைப் பாராட்டி அண்ணா விருதினையும் வழங்கியிருந்தேன். கட்சிப் பணியிலும், மக்கள் பணியிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட க.சுந்தரத்தின் மறைவு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (18.09.2024) மீஞ்சூரிலுள்ள க. சுந்தரத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எம். நாசர், சுதர்சனம், கோவிந்தராஜ், துரை சந்திரசேகர் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisment