தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு 2வது கூட்டம் இன்று (05-12-24) சென்னையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவகையில், நம்மை தக்க வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறோம். தமிழ்நாடு காலநிலை பசுமை நிறுவனம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இது போன்ற இயக்கங்கள் திட்டமிடுதல்கள் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை.
இந்த இயக்கங்களுக்கு கொள்கை வழிகாட்டவும், ஆலோசனை வழங்கவும் காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழுவை தமிழக அரசு உருவாக்கி உறுப்பினர்களை நியமித்திருக்கிறோம். காலநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு அரசின் மாநில செயல்திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது தான் இந்த குழுவினுடைய கடமை ஆகும். மாநில மற்றும் மாவட்ட காலநிலை மாற்றத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதும், அரசின் அனைத்து பணிகளும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கக் குறிக்கோளோடு இணைந்து அமைவதை உறுதி செய்வது இந்த குழுவின் கடமை. எனது தலைமையிலான இந்த குழு தான் இந்தியாவிலேயே, காலநிலை மாற்றத்திற்கான முதல் குழு. அந்த வகையில், தமிழ்நாடு இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு இருக்கிறது. நீண்ட கடற்கரையை பாதுகாக்க தமிழ்நாடு நெய்தல் மீட்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடியில் 5,000 சிறிய நீர் பாசனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீரேற்று நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கைகள் தயாரிக்கபப்ட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மஞ்சள் பைத் திட்டம் மூலம் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பயன்பாடு குறைந்துள்ளது. இயற்கை வளத்தை பாதிக்காத வகையில் பல முன்னெச்சைரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.