Skip to main content

“அடுத்தமுறை கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
Cm Mk stalin announced relief fund on marina air show incident

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், 10 லட்சத்திற்கு மேலானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, மக்கள் வெளியேற முடியாமல் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மக்கள் பலரும் அவதிப்பட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5 பேர், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும், சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, ‘நேற்று (06.10.2024) சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாகரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும். 

இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’ எனக் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்