
கடலூர் மாவட்டம் கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.என். பேட்டை, சின்ன காரைக்காடு கம்பளி மேடு குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூவாணிகுப்பம், தீர்த்தனகிரி ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் ஆம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாமிற்கு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயிர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் கலந்துகொண்டு முகாம்களை துவக்கி வைத்து பயனளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அரசின் செயல்பாடு குறித்து பேசினார்கள்.
இதனைத் தொடர்ந்து தீர்த்தனகிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சமபந்தியில் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். நிகழ்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசுகையில், “தமிழக முதல்வர், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் அடையும் என்ற வகையில் வேற எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முன்னோடி திட்டமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் தமிழ்நாட்டில் அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை எளிமைப்படுத்தும் வகையில் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொது மக்களுக்கு சென்று சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தினை தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறார்” என்றார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பேசுகையில், “தமிழக முதல்வர் குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கு விப்பதற்காக மாதம் ரூ 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி மேம்படுவதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தினையும் செயல்படுத்தியுள்ளது. ஏழை எளிய மக்கள் கல்வியில் இடை நிறுத்தலை தவிர்ப்பதற்காகவும், இதனைக்கொண்டு அவர்கள் மேல் படிப்பிற்கு செல்வதற்கு உறுதனையாக உள்ளது. இதனை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் சரண்யா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஷபானா அஞ்சும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.